ஸ்டாலின் ஜேம்ஸ்பாண்ட் போல டிரஸ் போட்டு வருகிறார்..!! போட்டுத்தாக்கும் செல்லூர் ராஜூ.!

By Asianet TamilFirst Published Nov 15, 2021, 10:04 AM IST
Highlights

மழை வெள்ள பாதிப்பு குறித்து அதிமுக திமுக என இரு கட்சிகளையுமே அரசியலுக்காக சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். மதுரை மாநகராட்சி, சட்டக்கல்லூரி, மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆகியவை எல்லாம் திமுக ஆட்சியில் நீர்நிலையில்தான் கட்டப்பட்டன.

முதல்வர் ஸ்டாலின் ஜேம்ஸ்பான்ட் போல ஒருமுறை வருகிறார். இன்னொரு முறை பேண்ட் சட்டையில் வருகிறார். முதல்வர் நடிக்கிறாரோ,  படப்பிடிப்பில் உள்ளாரா என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதுரையில் ஓராண்டாக தெப்பக்குளம் நிரம்பி கிடக்கிறது. மதுரையை சுற்றியுள்ள நீர்நிலைகள் எல்லாம் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இதற்கு அதிமுக ஆட்சிதான் காரணம். எங்கள் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணிகளால்தான் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. திமுகவினர் எதையுமே செய்யவில்லை. அதிமுக அரசு குடிமராமத்து பணியை செய்தபோது ஏட்டிக்கு போட்டியாக தூர்வாரும் பணியைத் திமுகவினர் செய்தனர். ஸ்மார்ட் சிட்டி பணிகளைக் கண்காணிப்பது மத்திய குழுதான். அவர்கள் சான்றிதழ் கொடுத்தால்தான் வேலையே நடக்கும். ஸ்மார்ட் சிட்டி பணியில் ஊழல் என்று சொல்கிறார்கள். தற்போது ஆட்சி அதிகாரம் உங்கள் கையில்தானே இருக்கிறது. ஊழலை கண்டுடிக்க வேண்டியது தானே. குற்றச்சாட்டை கூறி திமுக பொறுப்பை தட்டி கழிப்பதா?

இரு மாதங்களுக்கு முன்பே திமுக அரசு விழித்திருக்க வேண்டும். ஆனால், விளம்பரம் தேடுவதிலேயே இந்த ஆட்சி உள்ளது. முதல்வர் ஸ்டாலின் ஜேம்ஸ்பான்ட் போல ஒருமுறை வருகிறார். இன்னொரு முறை பேண்ட் சட்டையில் வருகிறார். முதல்வர் நடிக்கிறாரோ,  படப்பிடிப்பில் உள்ளாரா என்று மக்கள் நினைக்கிறார்கள். ஸ்டாலினை முதல்வராக மக்கள் பார்க்கவில்லை. அதிமுக ஆட்சியில் மழைக்காலத்துக்கு முன்பே அதிகாரிகளைக் கண்காணிக்க நியமித்தோம். ஆனால், திமுக ஆட்சியில் அதிகாரிகள் தூக்கியடிக்கப்படுகிறார்கள். திமுக ஆட்சியில் புது அதிகாரிகளுக்கு வெள்ள நீர் எப்படி வரும், வடிகால் எப்படி வடியும் என தெரியவில்லை. தேவையில்லாமல் அதிமுக அரசை குறை சொல்லிக்கொண்டிருக்காமலும் லாலி பாடமாலும் முதல்வர், அமைச்சர்கள் மக்களுக்கு பணியாற்ற வேண்டும்.

எங்கள் ஆட்சியில் எப்படியோ இனியாவது திமுக ஆட்சியில் விழித்துக்கொண்டு சிறப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்க நகைக்கடனில் மோசடி என்று கூறுவதெல்லாம் தவறு. தமிழகத்தில் 4,449 கூட்டுறவுச் சங்கங்கள் இருக்கின்றன. அதிமுக ஆட்சியில் நகை மதிப்பீடு சரியாகவே இருந்தது. எங்கள் ஆட்சியில் நகைக் கடன்களில் மோசடி நடைபெற இல்லை. திமுக ஆட்சியில்தான் தங்க நகை மோசடி எல்லாம் நடைபெற்றது. தங்க நகைக்கடன் மோசடியில் திமுக முன்னாள் எம்.பி. ஒருவரே சிக்கியிருக்கிறார். கூட்டுறவுத் துறையில் தவறு நடந்தால் ஒருவரும் தப்பிக்க முடியாது. தவறு நடந்தால் கிரிமினல் குற்றவியல் நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்றியதே அதிமுகதான்.

தமிழகத்தில் நீர்நிலைகள் யாருடைய காலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டன? 2015-ஆம் ஆண்டிலேயே ஜெயலலிதா இதுபற்றி விவரமாக கூறியுள்ளார். வள்ளுவர் கோட்டத்தையே குளத்தில்தான் அன்றைய முதல்வர் கருணாநிதி கட்டினார். இது போன்று பல இடங்கள் அரசுத்துறை மற்றும் கட்சிக்காரர்களளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பட்டா போடப்பட்டுவிட்டன. தண்ணீர் செல்லும் இடங்களை, படகு செல்லும் இடங்களை பட்டா போட்டு கொடுத்தது கருணாநிதி ஆட்சியில்தான். மழை வெள்ள பாதிப்பு குறித்து அதிமுக திமுக என இரு கட்சிகளையுமே அரசியலுக்காக சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். மதுரை மாநகராட்சி, சட்டக்கல்லூரி, மதுரை உயர்நீதிமன்ற கிளை ஆகியவை எல்லாம் திமுக ஆட்சியில் நீர்நிலையில்தான் கட்டப்பட்டன. 

முல்லைப் பெரியாறை திமுக ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் திறந்திருந்தால் பரவாயில்லை. ஆனால் கேரள அரசு திறந்துவிட்டது. ஏன் திறக்கப்பட்டது எனக் கேள்வி கேட்டால் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்குக்கு வழி சொல்கிறார்கள். 2011-ஆம் ஆண்டில் நல்லவேளையாக ஜெயலலிதா ஆட்சி வந்தது. அப்படி வராமல் போயிருந்தால் முல்லைப்பெரியாறு அணையை கேரள அரசு இடித்திருக்கும். திமுக ஆட்சி தொடர்ந்திருந்தால் அணைக்கு வேட்டு வைத்திருப்பார்கள்.” என்று செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

click me!