Jai Bhim: நடிகர் சூர்யாவை எட்டி உதைப்போம் என்பதா.? பாமகவின் வன்முறை பேச்சு.. திமுக கூட்டணி கட்சி ஆவேசம்.!

By Asianet TamilFirst Published Nov 14, 2021, 11:01 PM IST
Highlights

"சூர்யாவைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியும், திரைப்படத்தை வெளியிட விடமாட்டோம், சூர்யாவை எட்டி உதைக்கிற முதல் இளைஞனுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று வன்முறையைத் தூண்டும் விதத்திலும் பாமகவினர் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது."

‘ஜெய் பீம்’ படம் தொடர்பாக தமிழகத்தில் வன்முறைக் கலாச்சாரத்தை அனுமதிக்கக் கூடாது. வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசுபவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சூர்யா தயாரித்து நடித்த ‘ஜெய் பீம்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், இப்படத்தில் வன்னியர்களை அவதூறு செய்துவிட்டதாக வன்னியர் அமைப்புகளும் பாமகவும் சூர்யாவுக்கு எதிராக வரிந்துகட்டியுள்ளன. சூர்யாவை பாமகவினர் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், மயிலாடுதுறை பாமக மாவட்ட செயலாளர் பழனிசாமி ’ஜெய்பீம்’ படத்துக்கு எதிராக போலீஸில் புகார் அளித்தார். பின்னர் அவர் கூறுகையில், “ஜெய் பீம் படத்தில் வன்னியர்கள் திட்டமிட்டு அவதூறு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். வன்னியர்களின் புனித சின்னம், தலைவர் காடுவெட்டி குருவை இழிவுபடுத்தியுள்ளனர்.

வன்னியர் சமூக மக்கள், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர்கள் போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்காக சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும். முத்துராமலிங்க தேவரின் குரு பூஜை நிகழ்வு குறித்து தெரியாது என்று பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதியை பெங்களூருவில் ஒரு இளைஞர் காலால் எட்டி உதைத்தார். அதைப்போலவே வன்னியர்களை இழிவுபடுத்திய சூர்யாவை எட்டி உதைப்போம். சூர்யா எங்கு சென்றாலும் அவரை சும்மாவிட மாட்டோம். சூர்யாவை உதைக்கும் நபருக்கு மயிலாடுதுறை மாவட்ட பா.ம.க. சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்” என்று  தெரிவித்திருந்தார். 

இந்த அறிவிப்புக்கு பாமகவை பலரும் சமூக ஊடகங்களில் கண்டித்து வரும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ் திரைப்பட உலகில் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் திரைப்படங்களாக வருவது அரிதினும் அரிதாக இருக்கும் சமயத்தில், ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டக் கதைக்களத்துடன் வெளிவந்துள்ள ‘ஜெய்பீம்’ திரைப்படம் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றிருக்கிறது. நடிகர் சூர்யா மற்றும் படக்குழுவினர் இதன் மூலம் சமூக பங்களிப்பைச் செய்துள்ளனர். 

படத்தின் மீது சுட்டிக்காட்டப்பட்ட சில விமர்சனங்களுக்கு தயாரிப்பாளர் தரப்பிலிருந்து சரியான விளக்கமும், படக் காட்சிகளில் ஒருசில திருத்தங்களும் செய்திருப்பதாகத் ஏற்கனவே அறிவிக்கப்படுள்ளது. படம் தொடர்பான தொலைக்காட்சி விவாதத்தில் பங்கெடுத்த தோழர் ஆதவன் தீட்சண்யாவுக்கு மிரட்டல் விடுத்ததும், சூர்யாவைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசியும், திரைப்படத்தை வெளியிட விடமாட்டோம், சூர்யாவை எட்டி உதைக்கிற முதல் இளைஞனுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு என்று வன்முறையைத் தூண்டும் விதத்திலும் பாமகவினர் பேசியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. 

இப்போக்கு அனுமதிக்கப்படுமானால் எதிர்காலத்தில் தமிழகத் திரையுலகமே நிர்மூலமாக்கப்படும். எனவே, தமிழகத்தில் வன்முறைக் கலாச்சாரத்தை அனுமதிக்கக் கூடாது. மேலும், இதுபோன்று வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசுபவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.” என்று அறிக்கையில் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

click me!