
உயிரை காக்க வேண்டிய சுகாதார துறை, உயிரை பறிக்கும் துறையாக செயல்படுகிறது என அமைச்சர் விஜயபாஸ்கரை, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடினார்.
இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கைத்தறி, பால்வளம், உணவுத்துறை என அனைத்து துறைகளும் செயல்படாமல் முடங்கியே கிடக்கிறது. குதிரை பேரம் விவகாரம், போதை குட்கா பொருட்கள் விவகாரம் தற்போது பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இதைபற்றி கேட்கும்போது, உரிய தகவல் கொடுத்தால், நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி கூறுகிறார்.
ஆனால், பல்வேறு நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகத்தில் குதிரை பேர ஆட்சி தான் நடக்கிறது. ஆட்சியை தக்க வைத்து கொள்ளையடிக்க திட்டமிட்டு செயல்படுகின்றனர்.
ஆர்கே நகர் இடைத் தேர்தலில் பணம் பட்டுவாடா செய்ததற்கான ரூ.85 கோடி ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். குட்கா பொருட்கள் விற்பனைக்கு ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதற்கான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இதுகுறித்த செய்தி அனைத்து நாளிதழ்களிலும் தலைப்பு செய்தியாக வந்தது. தனியார் ஆங்கில சேனலில், கவர் ஸ்டோரியாகவே வெளியிட்டனர். இதுபோன்ற ஆதாரங்கள் இருக்கும்போது, தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், தகவல் கொடுத்தால் நடவடிக்கை என பேசுகிறது.
எதையும் சட்ட ரீதியாக சந்திப்பேன் என கூறும் சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஏன் இதுவரை நீதிமன்றத்தை அணுகவில்லை. நாளிதழ்கள், டிவி சேனல்களில் வந்த உடனே அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, தன் மீதுள்ள புகாரை எதிர்த்து இருக்க வேண்டும் ஏன் அதை அவர் செய்யவில்லை.
இதை வைத்து பார்க்கும்போது, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் உடந்தையாக இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. இதனால், சம்பந்தப்பட்ட அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் உயர் அதிகாரிகளை அப்புறப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் பேசி இருக்கிறேன்.
கூவத்தூர் விவகாரம் பற்றி 2 எம்எல்ஏக்கள் பேசினார்கள். அதில், வெளியான வீடியோ காட்சிகள் பற்றி விரைவில் தெரிவிப்போம் என்றனர். ஆனால், இதுவரை எதையும் பேசவில்லை. மக்களுககு தெரிவிக்கவும் இல்லை. எம்எல்ஏ சரவணன், தன்னை பற்றி யாரோ அவதூறு செய்ததாகவும், சட்ட ரீதியாக சந்திப்பதாகவும் கூறினார். இதுவரை எதையும் செய்யவில்லை.
தமிழகத்தில் நடக்கும் ஆட்சியை பற்றி பலமுறை கவர்னரிடம் புகார் தெரிவித்துவிட்டோம். தொடர்ந்து வலியுறுத்தி வருவோம். ஒரு நிலையான மாற்றம் ஏற்படும் வரை, எங்களது எதிர்ப்பு போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.