
அதிமுகவில் பல அணிகளை உருவாக்கி, தமிழகத்தில் பாஜக அரசியல் நடத்தி வருகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.
இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் திருமாவளவன் கூறியதாவது:-
குஜராத் சபர்மதி ஆஸ்ரமத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது, பசுக்களுக்காக மனிதர்களை கொல்வதை ஏற்கமுடியாது என பிரதமர் மோடி பேசியுள்ளார். இதை விடுதலை சிறுத்தைகள் கட்சி வரவேற்கிறது. இதனை பிரதமர் மோடி, அறிக்கையாக வெளியிட்டு கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
தூக்துக்குடி காமராஜர் துறைமுகம், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை தனியார் மயமாக்குவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
குடியரசு தலைவர் தேர்தலில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதிமுகவில் 130 எம்எல்ஏக்கள், 47 எம்பிக்கள் உள்ளனர். இதை பொறுக்க முடியாத பாஜக, அதிமுகவை 3 அணிகளாக பிரித்து தமிழகத்தில் அரசியல் நடத்தி வருகிறது.
தமிழக அரசு தலித்கள் மீதான வன்கொடுமை தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும். 2015ம் ஆண்டு வன்கொடுமை சட்டத்தை சீர்செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.