ஸ்டாலினின் ஆக்கப்பூர்வ திட்டம்… சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் 48 மணி நேர சிகிச்சைகள் இலவசம்!!

By Narendran SFirst Published Nov 19, 2021, 10:29 AM IST
Highlights

#CMStalin | தமிழ்நாட்டில்  இன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கான முதல் 48 மணி நேர உயிர் காக்கும் உயர் சிகிச்சைகளை அரசு இலவசமாக வழங்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

தமிழ்நாட்டில்  இன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டத்தின் கீழ் சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கான முதல் 48 மணி நேர உயிர் காக்கும் உயர் சிகிச்சைகளை அரசு இலவசமாக வழங்கும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாலை பாதுகாப்பு குறித்தும்,  சாலை உயிரிழப்புகளை தடுப்பதற்கும் விபத்துகளை குறைப்பதற்கும், தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முன்னெடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். ஒரு லட்சம் மக்கள் தொகையில் சாலை விபத்துகளில் இறப்பு விகிதம் 23.9 என்றிருப்பது குறைக்கப்பட வேண்டும் எனவும்,  சாலைப் பயணங்கள் பொதுமக்களுக்கு மிகவும் பாதுகாப்பான ஒன்றாக அமைந்திடும் வகையிலும்,  சாலையில் உயிரிழப்புகளை தடுப்பதற்கும்,  விபத்துக்களை தவிர்ப்பதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக முதல்வர் மு.க.அறிவுறுத்தினார்.

மேலும் சாலை பராமரிப்பில் ஏற்படும் குறைகளை போர்க்கால அடிப்படையில் தீர்த்தல், தொலை நோக்கு திட்டங்களுடன் விபத்துகளை தடுத்தல் உள்ளிட்டவைகளுக்காக சாலை பாதுகாப்பு ஆணையம் அமைக்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சாலை பொறியியல் , வாகன போக்குவரத்து, காவல்துறை, மருத்துவத்துறை மற்றும் பள்ளி, கல்லூரி கல்வித் துறைகளை இணைத்து கருத்துக்களின் அடிப்படையில் வரைவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பல்துறை நிபுணர்கள் உள்ளடக்கிய சாலை பாதுகாப்பு ஆணையம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சாலை பாதுகாப்பு திட்டங்களையும், வழிமுறைகளையும், நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதி அதிகாரங்களுடன் உருவாக்கப்படும். மேலும் சாலை பராமரிப்பு ஏற்படும் குறைபாடுகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக தீர்வு காணவும், சாலை பொறியியல் தொடர்பான இடைவெளிகளை புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அறிவியல் பூர்வமாக அணுகி புதிய தொழில் நுட்பத்தோடு அதனை சரிசெய்து தொலைநோக்கு திட்டத்துடன் விபத்துகளைத் தவிர்ப்பதுமே இதன் முதன்மையான இலக்காகும். சாலை விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48  மணி நேரத்திற்கான அவசர மருத்துவ  சிகிச்சையை நம்மை காக்கும் 48 மணி நேரம் என்ற திட்டத்தின் கீழ் அரசு இலவசமாக வழங்க உள்ளது. இதற்கென சாலை ஓரங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளன.

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு அட்டை இல்லாதவர்களுக்கும், பிற மாநிலத்தவர், வேற்று நாட்டவர் என யாவரும் பயன்பெறும் இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அவசர மருத்துவ சேவைகள் சட்டத்தை இயற்ற அரசு திட்டமிட்டுள்ளது. செலவினங்கள் கணக்கீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதுநபர் ஒருவருக்கு 1 லட்சம் ரூபாய் வரம்பிற்குள் 81 விதமான மருத்துவ முறைகளை செயல்படுத்த உள்ளது.  அடிப்படை உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளவும் வழி வகை செய்யப்பட்டுள்ளது.  மேலும் சாலை பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்ற பயிற்சிகள், விழிப்புணர்வு வழங்கும் வரை இன்னுயிர் காப்போம் - உதவி செய் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீரான சாலைகள், நம்மை காக்கும் 48 மணி நேரம், அவசர மருத்துவ சேவைகளுக்கான சட்டம், உதவி செய் ஆகியவைகளை இன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

click me!