
எம்.ஜி.ஆர். சேர்த்து வைத்திருந்த மரியாதையில் பெரும் சேதாரத்தை இந்த அ.தி.மு.க. அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறது! என்று கடும் விமர்சனத்தை உருவாக்கியிருக்கிறது ‘எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா!’. காரணம், மக்களின் வரிப்பணத்தில் கணக்கு வழக்கில்லாத கோடிகளை எடுத்து வீசி தமிழகம் முழுவதும் இந்த விழாவை நடத்தி வந்திருக்கின்றனர். இந்த விழாவுக்கான செலவுகள் பற்றி ஆர்.டி.ஐ. மூலம் கேட்டாலும் பதில் சொல்வதில்லை! இந்த நிகழ்ச்சியின் பெயரில் சுருட்டப்பட்ட பணம் மிக அதிகம், மொத்தத்தில் எம்.ஜி.ஆர். பெயரில் ஊழல் நடக்கிறது! என்று கடும் விமர்சனத்தை உருவாக்கி மாஜி முதல்வரின் பெயரை கெடுத்திருக்கிறது இந்த விழா.
இதன் இறுதி விழா வரும் 30-ம் தேதியன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடக்கிறது. இதனோடு தமிழ்நாட்டின் பொன்விழா ஆண்டு கொண்டாட்டத்தையும் இணைத்து நடத்துகிறார்கள். விழாவில் பேருரையை முதல்வர் பழனிசாமி நிகழ்த்த, சிறப்புரையை துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆற்ற இருக்கிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் நடக்கும் இந்த விழாவில் ‘வாழ்த்துரை’ வழங்குவோர் பட்டியலில் முதலாவதாக சட்டமன்ற எதிர்கட்சி மற்றும் தி.மு.க. தலைவரான ஸ்டாலினின் பெயர் போடப்பட்டுள்ளது. தி.மு.க.வின் மகளிரணி மாநில செயலாளரான கனிமொழி எம்.பி. மற்றும் அக்கட்சியின் சென்னையை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. முத்தாய்ப்பாக டி.டி.வி. தினகரன் பெயரும் வாழ்த்துரை லிஸ்டில் இடம் பெற்றுள்ளது.
ஆக தலைநகரில் நடக்கும் இந்த நிறைவு விழாவில் ஸ்டாலின் டீம் கலந்து கொள்ளுமா? தி.மு.க.வை விட தங்களின் பரம எதிரியாக கருதும் தினகரன் கலந்து கொள்வாரா? என்பதுதான் அ.தி.மு.க. வட்டாரத்துக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் பரபர சலசலப்பு.
இந்த விழாவில் கலந்து கொள்ளும் ஐடியாவில்தான் ஸ்டாலின் இருந்தாராம். ஆனால் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக மக்கள் பணம் விரயமாக்கப்படுவதாகவும், அதற்கான கணக்கு வழக்குகள் முறையாக தரப்படுவதில்லை! என்பன போன்ற விவகாரங்களை அவரது கவனத்துக்கு கொண்டு போயினர் தி.மு.க. முக்கிய புள்ளிகள் சிலர். ”அடுத்து நம் ஆட்சி வரும்போது இந்த விழாவை வைத்து நிகழ்ந்த நிதி மோசடி, ஊழல்களை வைத்தே தனியாக பெரும் வழக்குகள் இப்போதிருக்கும் அமைச்சர்கள் மீது பதிவாகும்.
எனவே நீங்களும், நமது தரப்பும் இதில் கலந்து கொண்டு வீண் சர்ச்சையில் சிக்கவும் வேண்டாம். பிற்காலத்தில் நாம் வழக்கு பதிகையில் ‘சென்னையில் விழாவில் ஸ்டாலின், கனிமொழி, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இதன் மூலம் ஊழலில் அன்று அவர்களுக்கு கிடைத்த பங்கு எவ்வளவு?’ என்று பத்திரிக்கைகள் கேள்வி எழுப்பும், அ.தி.மு.க.வும் இப்படியே பாயும். எனவேதான் கலந்து கொள்ள வேண்டாம்.” என்று கூறியுள்ளனராம். தினகரனுக்கும் இதே டைம் அட்வைஸே கிடைத்துள்ளதாம்.
இவ்வளவுக்குப் பிறகும் இங்கே போலாமா? என ஸ்டாலின் யோசித்துக் கொண்டிருக்கிறாராம். ஆனால் தினாவோ, எம்.எல்.ஏ. எனும் முறையில் அழைப்பிதழில் பெயர் போட்டு அழைத்ததால் சென்று தலைவரை புகழ்ந்து பேசுகிறேன்! என்று சொல்லி இந்த மேடையில் தெறிக்க விடும் திட்டத்தில் இருக்கிறாராம்.
இந்நிலையில் ‘எதிர்கட்சிகள் என்று காழ்ப்புணர்ச்சியெல்லாம் காட்டாமல், பெயரைப் போட்டு அழைப்பு விடுத்ததுக்கு இப்படியெல்லாம அசிங்கப்படுத்துவார்கள்?’ என்று கடும் கடுப்பிலிருக்கிறதாம் எடப்பாடி தரப்பு.