
ஆர்.கே.நகர் தொகுதியை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் விட்டது கொடுமையிலும் கொடுமை என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்டாலினின் சொந்த தொகுதியான சென்னை கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட கொடுங்கையூர் குப்பைக் கிடங்கை ஆய்வு செய்தபின் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் திமுகவினரை ஈடுபட அறிவுறுத்தியது, மக்கள் நலனுக்காகவே தவிர அதில் எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை. பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருவதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் அறிக்கை விட்டிருக்கிறார். ஆனால் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
பருவமழை முன்னெச்சரிக்கைகளை அரசு உடனடியாக தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். ஆர்.கே.நகர் தொகுதியை ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பது கொடுமையிலும் கொடுமை. இன்னும் 2 நாட்களில் ஆர்.கே.நகர் பகுதியில் திமுகவினர் தூய்மைப் பணியினை மேற்கொள்வர்.
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.