
சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை சந்திக்க முடியாமல் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் , தெனாலி திரைப்படத்தில் வரும் கமலஹாசனைப் போல் அஞ்சுகிறார் என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்தத மார்ச் மாதம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பிரச்சாரம் நடைபெற்றது. ஆனால் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரையடுத்த அங்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
இத்தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதனிடையே ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தக் கூடாது என்றும், அங்கு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரும் இருப்பதால், அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், ஆர்,கே.நகர் தொகுதியில் போட்டியிட திமுக தயாரா என கேள்வி எழுப்பினார். அந்த இடைத் தேர்தலை சந்திக்கும் திராணியற்றவர்தான் ஸ்டாலின் என்று அமைச்சர் தெரிவித்தார்.
இடைத் தேர்தலில் போட்டியிட முடியாமல்தான் ஸ்டாலின் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளார் என குறிப்பிட்ட அமைச்சர் ஜெயகுமார், தெனாலி படத்தில் வரும் கமலஹாசனைப் போல் ஸ்டாலின் எல்லாவற்றுக்கும் பயப்படுகிறார் என தெரிவித்தார்.