
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை வரும் 30-ம் தேதி(திங்கட்கிழமை) தொடங்கப்படும் என விசாரணை ஆணைய தலைவரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான ஆறுமுக சாமி தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் இறப்பு தொடர்பாக சந்தேகங்களும் கேள்விகளும் எழுந்ததை அடுத்து ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
விசாரணை ஆணையத்தை அமைத்த முதல்வர் பழனிசாமி, 3 மாதத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், விசாரணை ஆணைய தலைவர் ஆறுமுகசாமி, இன்று விசாரணையைத் தொடங்க உள்ளார். அதற்காக அவர் இன்று விசாரணை ஆணைய அலுவலகத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22-ம் தேதி முதல் அவர் மறைந்த டிசம்பர் 5-ம் தேதி வரை என்ன நடந்தது? ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள், அப்பல்லோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் ஆகியவை தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை சந்திக்க சென்ற அப்போதைய மத்திய அமைச்சரும் தற்போதைய குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு, முன்னாள் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிலவுகிறது.
ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா, அமைச்சர்கள் என அனைவரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்படலாம் என தெரிகிறது.
இந்நிலையில், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை வரும் திங்கட்கிழமை தொடங்கப்படும் எனவும் விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும் எனவும் ஆறுமுகசாமி தெரிவித்துள்ளார்.