ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு... ஆதரவுக் கரம் நீட்டிய அன்புமணி ராமதாஸ்.. ஒரே நேர்க்கோட்டில் திமுக - பாமக.!

By Asianet TamilFirst Published Jan 6, 2022, 10:07 PM IST
Highlights

துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க சட்டம் இயற்றக் கோரி கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைச் செயல்படுத்துவதற்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகியிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.

துணைவேந்தர்கள் நியமனச் சட்டத்தை பாமக ஆதரிக்கும் என்றும் இந்தச் சட்டத் திருத்தம் மிகவும் அவசியமானதாகும் என்றும் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

ஆளுநரின் வேந்தர் அதிகாரத்தைக் குறைக்க திமுக அரசு முடிவு செய்திருக்கிறது. இந்த முடிவை அறிவிப்பதற்கு தூண்டிலாக அமைந்தது சட்டப்பேரவை பாமக குழு தலைவர் ஜி.கே. மணி எழுப்பிய கேள்விதான். இன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின்போது கேள்வி நேரத்தில், ஜி.கே.மணி, துணைவேந்தர்கள் நியமனம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், “பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும்; இதுதொடர்பாக மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இக்கேள்வியை திமுக எம்.எல்.ஏ.வை வைத்து ஆளுந்தரப்பு கேட்டிருக்க முடியும். ஆனால், பாமக எம்.எல்.ஏ இக்கேள்வியைக் கேட்டு, அதற்கு முதல்வர் அளித்த பதிலும் உற்று நோக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், முதல்வரின் அறிவிப்புக்கு பாமக தரப்பு ஆதரவுக் கரம் நீட்டியிருக்கிறது. இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவரும் எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் ட்விட்டரிலும் பதிவிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

மேலும் துணைவேந்தர்களைத் தமிழக அரசே நியமிக்க சட்டம் இயற்றக் கோரி கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைச் செயல்படுத்துவதற்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகியிருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். கட்டுப்பாட்டில் இருந்தால்தான் தமிழ்நாட்டின் கல்வி நலனையும், கலாச்சார நலனையும் காக்க முடியும். அந்த வகையில் இந்தச் சட்டத் திருத்தம் மிகவும் அவசியமானதாகும். எனவே, துணைவேந்தர்கள் நியமனச் சட்டத்தை பாமக ஆதரிக்கும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார். இதன்மூலம் துணைவேந்தர்கள் நியமனம் என்பது மாநில அரசின் கையில் இருக்க வேண்டும் என்பது அன்புமணியின் பதிவில் இருந்து தெரிய வருகிறது. இந்த விஷயத்தில் திமுகவும் பாமகவும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதும் தெளிவாகிறது.

click me!