Latest Videos

தமிழக ஆளுநருக்கு செக்.. ஜெயலலிதாவின் அஸ்திரத்தையே கையில் எடுக்கும் ஸ்டாலின்... ஜெயிக்கப் போவது யார்..?

By Asianet TamilFirst Published Jan 6, 2022, 9:38 PM IST
Highlights

மார்ச் மாதத்தில் திமுக அரசு, சட்டத் திருத்தம் கொண்டு வந்தாலும், அதற்கு ஆளுநரின் ஒப்புதல் தேவை.  தன் அதிகாரங்களைக் குறைத்துக்கொள்ள ஆளுநரே ஒப்புக்கொள்வாரா?

தமிழக ஆளுநருக்கு செக் வைக்க ஜெயலலிதா எடுத்த அஸ்திரத்தை கையில் முதல்வர் ஸ்டாலின் எடுத்துள்ள நிலையில், அந்த முயற்சி வெல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

 நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவில் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பாத ஆளுநர் ஆர்.என். ரவி மீது திமுக அரசு அதிருப்தியில் உள்ளது. மேலும் துணைவேந்தர்களுடன் ஆலோசனை, புதியக் கல்வி கொள்கை தொடர்பாக ஆளுநர்களுடன்  விவாதிப்பது என தமிழக ஆளுநர் வேகம் காட்டி வருவதால், அதற்குக் கடிவாளம் போட ஆளுந்தரப்பு நினைக்கிறது. இந்நிலையில்தான் இன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தில், பாமக எம்.எல்.ஏ. ஜி.கே.மணி, துணைவேந்தர்கள் நியமனம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், “பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்யும்; இதுதொடர்பாக மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஏற்கெனவே மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் ஆகிய அரசுகள் எடுத்த அதே முடிவை தமிழக அரசும் எடுக்கத் துணிந்துள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதா அமலுக்கு வந்தால், துணைவேந்தர் நியமனங்களை அரசு முடிவின் படியே வேந்தர் பொறுப்பை வகிக்கும் ஆளுநரால் செய்ய முடியும். இன்று மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தமிழகம் ஆகிய மாநிலங்கள் வேந்தர் அதிகாரங்களைக் குறைக்கும் நடவடிக்கையை எடுத்துள்ள நிலையில், 1995-ஆம் ஆண்டிலேயே செயல்படுத்திக் காட்டியர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதார். அந்தக் காலகட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ஆளுநர் சென்னா ரெட்டிக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவியது.

ஆளுநருக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்த ஜெயலலிதா மீது 1995-ல் ஜெயலலிதா மீது ஊழல் வழக்கை பதிய ஆளுநர் அனுமதி அளித்து அதிர்ச்சியூட்டினார். இதற்கு ஜெயலலிதா தரப்பில் பதிலடி தொடர்ந்தது. அதில் ஒன்றாக, பல்கலைக்கழகங்களில் வேந்தரின் அதிகாரத்தை ஆளுநரிடமிருந்து மாநில முதல்வருக்கு மாற்றி சட்டத் திருத்தம் கொண்டுவந்தார் ஜெயலலிதா. அந்த சட்டத் திருத்தத்துக்கு ஆளுநரின் அனுமதி தேவைப்பட்டது. ஆனால், ஆளுநர் கையெழுத்திடவில்லை. 1996-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, அந்த மசோதா மீது அன்றைய திமுக அரசு ஆர்வம் காட்டவில்லை. அதனால், அந்த சட்ட மசோதா செயல்பாட்டுக்கு வரவில்லை. ஆனால், அதிரடியாக ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை பெரும் விவாதமானது.

இன்று ஸ்டாலினும் ஜெயலலிதா எடுத்த அதேபோன்ற முடிவைதான் எடுத்துள்ளார். மார்ச் மாதத்தில் திமுக அரசு, சட்டத் திருத்தம் கொண்டு வந்தாலும், அதற்கு ஆளுநரின் ஒப்புதல் தேவை.  தன் அதிகாரங்களைக் குறைத்துக்கொள்ள ஆளுநரே ஒப்புக்கொள்வாரா, மத்திய அரசின் பிரதிநிதியாகச் செயல்படும் ஆளுநர் அதற்கு இணங்குவாரா  என்ற கேள்வியும் இதில் அடங்கியுள்ளது. அப்படி ஆளுநர் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டால்தான், அது செல்லுபடியாகும். எனவே, இந்த விவகாரத்தில் வெல்லப்போவது யார் என்பதை அறிய பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
 

click me!