தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே சோகம்.. ஸ்ரீவில்லிப்புத்தூரில் காங்கிரஸ் ஜெயித்தால் இடைத்தேர்தல்..!

By Asianet TamilFirst Published Apr 11, 2021, 9:59 AM IST
Highlights

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மாதவராவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
 

திமுக கூட்டணியில் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அக்கட்சியின் சார்பாக தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் மாதவரவ். சட்டப்பேரவைத் தேர்தலில் முதன் முறையாகப் போட்டியிட்ட மாதவராவ் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ஆதரவாக அவருடைய மகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவந்தார்.
கடந்த 6ஆம் தேதி நடந்தத் தேர்தலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதியில் 73.03 சதவீத வாக்குகள் பதிவாயின. இதற்கிடையே கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வந்த மாதவராவுக்கு நுரையீரலில் தீவிர பாதிப்பு ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும்கூட அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மாதவராவ் காலமானார். தேர்தல் முடிவு தெரிவதற்கு முன்பே மாதவராவ் கொரோனாவால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு தேர்தலில் மாதவராவ் வெற்றி பெற்றால், அந்தத் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தும் சூழல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால், மற்ற கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால், அதற்கு அவசியம் இல்லாமல் போகும். கடந்த 1991-இல் அமேதி தொகுதியில் போட்டியிட்ட ராஜீவ் காந்தி, அந்தத் தொகுதியில் தேர்தல் முடிந்த பிறகு படுகொலை செய்யப்பட்டார். வாக்கு எண்ணிக்கையில் ராஜீவ் காந்தி வென்ற நிலையில், அந்தத் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடந்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!