இலங்கைகாரன் நம்பிக்கை துரோகி.. கடன் கொடுக்கும் போதே இதையும் செஞ்சிடுங்க மோடி ஜி.. காங் MLA கோரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Jan 22, 2022, 3:34 PM IST
Highlights

கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா கடன் உதவி கொடுக்கும் அதே நேரத்தில் இலங்கையில் 13-வது சட்டத்திருத்தம் அமல்படுத்த இலங்கை அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கோரிக்கை வைத்துள்ளார்.

கடனில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா கடன் உதவி கொடுக்கும் அதே நேரத்தில் இலங்கையில் 13-வது சட்டத்திருத்தம் அமல்படுத்த இலங்கை அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கோரிக்கை வைத்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இலங்கை தமிழர் நல்வாழ்வுக்கான உத்தரவாதத்தை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிங்கள இனவாத அரசு தமிழர்களை இனப்படுகொலை செய்தது, அந்தப் போர் புலிகளுக்கு எதிரானது அல்ல அது தமிழ் இன அழிப்புக்கான போர் என பல்வேறு தமிழ் அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றன. நாடுகடந்த தமிழர்கள் இக் கோரிக்கையை முன்வைத்து இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான கோரிக்கைகள் ஐநா மன்றத்திலும் முன் வைக்கப்பட்டு அது கிடப்பில் உள்ளது.

போர் முடிந்து பத்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், இலங்கைவாழ் தமிழர்களுக்கு  உரிய அங்கீகாரமின்றி உள்நாட்டிலேயே அகதிகளை போல வாழ்ந்து வருகின்றனர்.எனவே இலங்கையில் ராஜீவ் ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகிறது. தேர்தல் நேரத்தில் மட்டும் தேர்தல் வாக்குறுதியாக இதை கூறும் இலங்கை கட்சிகள், தேர்தல் முடிந்த பிறகு அதை  ஒதுக்கி வைத்து விடுகின்றன.

இந்நிலையில்தான் தற்போது இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அந்நாடு திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. எனவே இந்தியா இலங்கைக்கு பல ஆயிரம் கோடிகளை கடன் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இதுகுறித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்த பாமக நிறுவனர் ராமதாஸ் பல்வேறு தருணங்களில் இந்தியாவுக்கு துரோகம் செய்த இலங்கை அரசு இம்முறையாவது இந்திய அரசின் கடன் வசதிகளைப் பெற்றுக் கொண்டு ஆதரவாக இருக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை என்று கூறியுள்ளார்.மேலும், வரலாறு காணாத கடன் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உணவு மற்றும் எரிபொருள் வழங்குவதற்கு, இந்தியா 18 ஆயிரத்து 90 கோடி கடன் வசதியை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகிறது. 

இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்திக்கொண்டு சீனா உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கையே  இந்தியாவின் பக்கம் திருப்ப வேண்டும், ஆனால் கச்சத்தீவு உள்ளிட்ட நிலப்பரப்பை பெற்றுக் கொண்டு கோடிக்கணக்கில் நிதி உதவியையும் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு துரோகம் செய்வதே இலங்கையின் வரலாறாக உள்ளது. இந்நிலையில் கடன் வழங்கும் போதே இந்தியாவுக்கு ஆதரவான இலங்கை தமிழர்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ள வேண்டும், இலங்கை அரசியல் சட்டத்தில் செய்யப்பட்ட 13-வது திருத்தத்தின்படி தமிழர் பகுதிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் தமிழக  சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அதன் விவரம் பின்வருமாறு:- 

முன்னாள் பாரத பிரதமர் தலைவர் திரு. ராஜீவ் காந்தி அவர்களின்  முயற்சியால் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டது. 1987 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கும், இலங்கை அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்தனேவுக்கும் இடையிலான இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கையில் 13-வது சட்டத் திருத்தம் ஏற்பட்டது. தமிழர் பிரச்சினை குறித்துப் பேசும் ஒரே அரசமைப்புச் சட்டப் பிரிவாக 13-வது சட்டத் திருத்தம் மட்டுமே இருந்து வருகிறது. முழு அளவிலான உள்நாட்டுப் போர் உருவாகியிருந்த நேரத்தில் இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சி அது. மாகாண கவுன்சில்களின் உருவாக்கத்திற்கும், சிங்களர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகள் உட்பட 9 மாகாணங்களும் சுயாட்சி மேற்கொள்ளும் வகையில் அதிகாரப்பகிர்வு கிடைப்பதற்கு உறுதிப்படுத்தியது. 

கல்வி, ஆரோக்கியம், விவசாயம், வீட்டுவசதி, நிலம், காவல் துறை போன்ற பிரிவுகளில் மாகாண நிர்வாகங்களுக்கு அதிகாரம் தரப்படுகிறது. ஆனால், இத்தகைய அதிகாரம் இன்றளவும் தரப்படவில்லை. தற்போது, இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது. பல்வேறு நாடுகளிடம் இருந்து கடன் வாங்கிக் கொண்டு இருக்கிறது இலங்கை. இலங்கைக்கு சுமார் 6 ஆயிரத்து 700 கோடி ரூபாயை கடனாக இந்தியா தர இருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன. கடன் தரப் போகும் இந்தியா, இலங்கைத் தமிழர் நல்வாழ்வுக்கான உத்தரவாதத்தை இலங்கையிடம் இருந்து பெற வேண்டும் மேலும், இலங்கைத் தமிழருக்கு சம உரிமை பெற்றுத் தரும் அரசியல் சாசன 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக் கொள்கிறேன்.
 

click me!