எம்எல்ஏக்கள், எம்.பிக்கள் இனி தப்பு பண்ணினா உடனே விசாரணை… உடனே தீர்ப்பு… சென்னையில் சிறப்பு விரைவு நீதிமன்றம் !!

By Selvanayagam PFirst Published Sep 18, 2018, 8:31 PM IST
Highlights

தமிழகத்தில் எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் மீதான கிரிமினல் வழக்குளை விசாரிக்க  சிறப்பு விரைவு நீதிமன்றம் ஒன்றை அமைத்து  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பிக்கள் மீதுள்ள கிரிமினல் வழக்குளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நாடு முழுவதும 12 நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதில் 1 நீதிமன்றம் சென்னையில் அமைக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் தமிழகத்தில் தோந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் மீதான  கிரிமினல் வழக்குகளை விசாரிக்கவும், தீர்ப்பு வழங்கவும் சிறப்பு விரைவு நீதிமன்றம்  அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.

இதில் தமிழகம் தவிர பிற மாநிலங்களில் ஏற்கனவே இந்த நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில்தான் கடைசியாக இந்த நீதிமன்றம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த பாஜக வழக்கறிஞர் அஸ்வின் குமார் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த விரைவு நீதிமன்றங்களை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லியில் 2 நீதிமன்றங்களும் ஆந்திரா, பீகார், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, தெலங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்குவங்கம் போன்ற  மாநிலங்களில் தலா ஒரு நீதிமன்றம் என இதுவரை 11 சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, அவற்றின் மூலம் 1097 வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் 12 ஆவது சிறப்பு விரைவு நீதிமன்றம் சென்னையில்  அமைக்க தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இந்த நீதிமன்றங்கள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தின்  கண்காணிப்பில் செயல்படும் என்றும், வரும் 10 ஆம் தேதிக்குள் இந்த நீதிமன்றத்தின் செயல்பாடுகள் குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

click me!