
அரசியல் விமர்சனங்களில் ’அவதானிப்பு’ மிக நுணுக்கமான கலை. நமது ‘நியூஸ் ஃபாஸ்ட்’ இணையதளம் இதை மிக தெளிவாக செய்கிறது என்பது அதை ஃபாலோ செய்யும் வாசிப்பாளர்களுக்கு நிச்சயம் புரிந்திருக்கும்.
லேட்டஸ்டாக நியூஸ் ஃபாஸ்ட் அடித்திருக்கும் அரசியல் சிக்ஸர் பற்றிய பதிவுதான் இது...
எடப்பாடி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்ட போது தமிழக சட்டசபையில் ‘மாண்பு’ எனும் திரெளபதி எதிர்கட்சிகளால் துகிலுரியப்பட்ட கொடுமையை தமிழகம் அறியும். அதேநாளில் சபாநாயகரும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலரால் அவமரியாதைக்கு ஆளாக்கப்பட்டார்.
இந்த விவகாரம் சட்டமன்ற உரிமைக்குழுவின் விசாரணைக்கு சென்றது, பின் மேற்படி தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தண்டனையும் தயாரானது. அதன்படி அவர்கள் குறைந்தது 6 மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்படுவர் எனும் நிலை உருவானது. இந்த சூழலில் திடீர் திருப்பமாக ஸ்டாலின் தரப்பு சபாநாயகரை சந்தித்து சமாதான படலத்தை மேற்கொண்டது, தண்டனைக்கு உள்ளாக இருந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் சபாநாயர் தனபாலை சந்தித்து மன்னிப்பு கோரினர்.
இதன் விளைவாக அவர்கள் மீதான தண்டனை அறிவிப்பு நிறுத்தப்பட்டது. இந்த விவகாரத்தை அத்தோடு விட்டுவிடுவதாக சபாநாயகர் அறிவிக்க, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களும் ஏற்றுக் கொண்டனர். தமிழக சட்டசபை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாகரிக தினம் அது என்று அந்த நாள் கொண்டாடப்பட்டது.
இந்த விஷயத்தை அப்போதே கையாண்ட நமது நியூஸ்ஃபாஸ்ட் இணையதளம்...ஈகோவை துறந்து மன்னிப்பு கேட்ட தி.மு.க., பிற்கால அபாயங்கள் எதை பற்றியும் கவலைப்படாமல் அதை ஏற்றுக்கொண்ட அ.தி.மு.க. இரண்டையும் பாராட்டிய அதேவேளையில், சில விஷயங்களையும் குறிப்பிட்டிருந்தோம்.
அதாவது, தி.மு.க.வின் 7 எம்.எல்.ஏ.க்களை 6 மாதம் சஸ்பெண்ட் செய்தால் அ.தி.மு.க.வுக்கு அது பல வகையில் பலனளிக்கும். நாளைக்கே நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டு வரப்பட்டாலும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் ஏழுபேர் வாக்குகள் குறைவது ஆளுங்கட்சிக்கு சாதகம் உள்ளிட்ட பல விஷயங்கள் இருக்கின்றன. அந்த யோசனையையெல்லாம் தாண்டி அ.தி.மு.க. இவர்களை மன்னித்திருக்கிறதென்றால் இதற்கு பிரதி உபகாரமாக தி.மு.க. பல விஷயங்களை செய்ய வேண்டியிருக்கும் என குறிப்பிட்டிருந்தோம்.
தி.மு.க. தனது கெத்தான தனித்தன்மையையே இழக்க வேண்டி வரலாம் என்று சொல்லியிருந்தோம். பல விஷயங்களில் கெத்தாக எழுந்து போராட முடியாது, ஸ்டாலினின் எம்.எல்.ஏ.க்கள் அவையை முடக்குமளவுக்கு எதிர்ப்புகளை காட்ட முடியாதே என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தோம்.
அன்று நாம் சொன்ன அதைத்தான் இன்று முக்கிய மீடியாக்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. உட்கட்சிக்குள் ஏக குழப்பங்களுடன் மிக வீக் ஆக இருக்கிறது எடப்பாடியின் அரசு. நெருக்கி நிற்கும் எண்ணிக்கையுடன் வலுவாக இருக்கிறது எதிர்க்கட்சியான தி.மு.க. ஆனால் இந்நிலையிலும் பல துறை மானியக்கோரிக்கைகளை மிக எளிதாக நிறைவேற்றிவிட்டது எடப்பாடி அரசு. எதிர்கட்சிகளின் பெரிய அளவிலான ஆர்பாட்டங்களோ, எதிர்ப்புகளோ, சபாநாயகர் முற்றுகை, மானியக்கோரிக்கை விளக்க அறிக்கை கிழிப்பு..என்பது உள்ளிட்ட எந்த பெரிய இடையூறுமில்லாமல் சிம்பிளாக நடந்திருக்கிறது.
இதற்கு முக்கிய காரணம் ஸ்டாலின் அண்ட்கோ சைலண்ட் ஆனதுதான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ‘சஸ்பெண்டை கைவிட்டதற்கு பிரதியுபகாரமாக எதிர்ப்பு அரசியலை ஸ்டாலின் கைவிட்டிருக்கிறார் என்றே தெரிகிறது. சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் வகையில் ஆளுங்கட்சியின் மானியக்கோரிக்கை விஷயங்கள் ஒன்றும் தலைசிறந்தவையில்லை. ஆனாலும் ஸ்டாலின் டீம் வழக்கமான வெளிநடப்புகளை தாண்டி பெரிதாக எந்த எதிர்ப்பையும் செய்யாததே எடப்பாடி அணிக்கு பெரிய தெம்பாகி இருக்கிறது.
ஆக தன் எம்.எல்.ஏ.க்கள் ஏழு பேருக்காக மக்களின் உரிமைகளை அடமானம் வைத்துவிட்டாரா ஸ்டாலின்?” என்று கேட்கிறார்கள்.
ஆனால் தி.மு.க. தரப்போ “நிச்சயமாக மக்களின் உரிமைகளை தளபதி விட்டுக் கொடுக்கவில்லை. அவருக்கு கண் அறுவை சிகிச்சை உள்ளிட்ட சில தொந்தரவுகள் இருந்ததால் பரபரப்பை கொஞ்சம் குறைத்துக் கொண்டார் அவ்வளவே. எடப்பாடி அரசுக்கு எந்த பிரதியுபகாரத்தையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.” என்று அல்வா விளக்கம் கொடுக்கிறார்கள்.
ஆனால் தமிழகத்தில் அரசியலை அறிந்த எவரும் இதை நம்ப தயாராக இல்லையே தளபதி! அடித்து ஆட வேண்டிய நேரத்தில் தங்களின் கைகளை தாங்களே கட்டிக் கொண்ட அவலத்தை காண நேராமல்தான் கறுப்புக் கண்ணாடி அணிந்திருக்கிறாரோ ஸ்டாலின்?!