
கடந்த ஓராண்டாக காலியாக இருக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான இடங்கள் காலியாக இருக்கின்றன. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு ஆர்.கே.நகர் தொகுதி காலியாக உள்ளது. இதற்கெல்லாம் தேர்தல் நடத்துவதை விடுத்து மேலும் 18 தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால் ஆதிதிராவிடர்களுக்கான இட ஒதுக்கீடு முறையாக வழங்கப்படாததால் தேர்தலை ரத்து செய்து மறு அறிவிப்பு வெளியிட வேண்டும் என கோரி திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி தேர்தலை ஒத்திவைத்தார். ஆனால் டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்திமுடிக்குமாறு உத்தரவிட்டது.
ஆனால் அதன்பிறகு பலமுறை உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் கெடு விதித்தும் இதுவரை உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது குறித்து தமிழக அரசோ தேர்தல் ஆணையமோ கண்டுகொண்ட மாதிரி தெரியவில்லை.
அடுத்தது ஆர்.கே.நகர் தொகுதி. ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு 10 மாதங்களாக காலியாக உள்ளது ஆர்.கே.நகர் தொகுதி. ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், பணப்பட்டுவாடா செய்யப்பட்டதால் ரத்து செய்யப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்துவதிலும் அரசோ தேர்தல் ஆணையமோ கவனம் செலுத்தவில்லை.
மக்கள் மத்தியில் ஆளும் அதிமுக மீது கடுமையான அதிருப்தி நிலவுவதால் தேர்தலை சந்தித்தால் தோல்வியைத் தழுவ நேரிடும் என்பதால் தேர்தலை சந்திக்காமல் அரசு நழுவிக் கொண்டிருக்கிறது என்ற கருத்தும் பரவலாக உள்ளது.
இப்படி, உள்ளாட்சித் தேர்தல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆகியவற்றை நடத்தி ஏற்கனவே காலியாக உள்ள இடங்களை நிரப்புவதை விடுத்து மேலும் 18 தொகுதிகளை காலியாக்கி விளையாடிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.
ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக 18 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்து அந்த தொகுதிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தற்போதைய ஆட்சியாளர்கள் தயாராக இருப்பதை இந்த நடவடிக்கைகள் வெளிச்சம் போட்டு காட்டுகின்றன.