கேக்கை கபளீகரம் செய்த தமிழிசை: தூய்மை இந்தியாவை துவைத்துக் கட்டும் விமர்சனங்கள்...

First Published Jun 6, 2017, 9:15 AM IST
Highlights
Special Stories on Reviews of Clean India


மோடியே மெர்சலாகிடுவார் அந்த வீடியோவை பார்த்தால். ‘தூய்மை இந்தியா’ திட்டத்துக்கு வலுவேற்றி, உரமேற்றி, ஊட்டமேற்றி, பெப் ஏற்றி...இன்னும் என்னவெல்லாமோ ஏற்றி தூள் பறத்தி துவம்சமாக்கும் வண்ணம் தமிழிசை தலைமையில் தமிழக பா.ஜ.க. குரூப்பின் வீடியோ ஒன்று சாதனை படைத்திருக்கிறது.

‘இந்த மாதிரியான பா.ஜ.க. தலைவர்கள் இருக்கும் வரையில் ஸ்வச் பாரத் என்ன, குச் பாரத், மச் பாரத் என எதுவேணா கொண்டாங்க மோடி சார். நாங்க பின்னி ப்பேர்த்தெடுத்துவோம்ல!’ என்றி ஆளாளுக்கு கமெண்ட் போட்டு கலாய்க்கும் வண்ணம் வகைதொகையில்லாமல் வைரலாகிக் கொண்டிருக்கும் அந்த வீடியோவில்...

தமிழிசை செளந்திரராஜனின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு....என்று பேக் கிரவுண்டில் ஒருவர் பேசும் வாய்ஸ் கேட்கிறது. தமிழிசை ஒரு பெரிய கேக்கை வெட்டி, அதை அப்படியே மாடுக்கு கைநிறைய தவிடு அள்ளி போடுவது போல் அள்ளியள்ளி மக்களுக்கு வழங்குகிறார். நல்லா கவனிச்சுக்கோங்க கையுறையெல்லாம் இல்லை, வெறும் கையில்தான் கேக்கை பிய்த்து அள்ளியள்ளி கொடுக்கிறார்.

இந்த நேரத்தில் அவரது இடது கையால் அவர் தனது நாசியை தொட, அப்போது கொஞ்சம் க்ரீம் அவர் நாசியில் ஒட்டிக் கொள்கிறது. உடனே தனது கையிலிருக்கும் கர்சீப்பால் அதை துடைத்துவிட்டு அந்த கர்சீப்பையும் உதறி கீழே போடுகிறார். ஆனாலும் நாசியில் மீண்டும் பிரச்னை. இந்த நேரத்தில் பக்கத்திலிருக்கும் பா.ஜ.க. இயக்க பெண்மணி ஒருவர் முன்வந்து தமிழிசையின் கர்சீப்பை வாங்கி அவரது நாசி, நாடியெல்லாம் துடைத்துவிடுகிறார். பின் அந்த கர்சீப்பை ஒரு மாதிரி சுருட்டி தமிழிசையின் கையில் தருகிறார். அந்த சுருட்டலை பார்த்ததும் சற்றே முகம் மாறும் தமிழிசையோ அதை மீண்டும் அவர் கையில் கொடுத்து மடித்து தர சொல்கிறார். உடனே அந்த பெண் சங்கோஜமான முகத்துடன் அந்த கர்சீப்பை விரித்து நன்றாக மடித்து கொடுக்கிறார்.

இதெல்லாம் ஒரு புறம் நடந்து கொண்டிருக்க, தமிழிசையோ எந்த தயக்கமுமில்லாமல் தனது வெறுங்கையில் கைக்கை பிய்த்து க்ரீமெல்லாம் வழிய வழிய தன்னை நோக்கி வரவழைக்கப்படும் ஏழை பெண்களுக்கு, பாட்டிகளுக்கு, குழந்தைகளுக்கு அதை பிய்த்து கொடுத்துக் கொண்டே இருக்கிறார். ஒரு கட்டத்தில் ஒரு குழந்தை கேக் மேட்டையிலேயே சப்பென உட்கார வைக்கப்படுகிறது. அதற்கு கைக்கை வழங்கி போட்டோவுக்கு போஸ் வேறு கொடுக்கிறார் தமிழிசை. இப்படியாக சுத்தமும், சுகாதாரமுமாக நகர்கிறது அந்த வீடியோ.

இந்த வீடியோவை எடுத்து வைத்து விமர்சித்து தள்ளுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்...பிரதமர் தூய்மை இந்தியா, தூய்மை இந்தியா என்று நாள் முழுக்க பேசிக்கொண்டிருக்க, தமிழக பி.ஜே.பி.யின் மாநில தலைவர் இப்படி கேக்கை பிசைந்து வழங்கி தன்பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார். ஏழை மக்கள் என்பதால் ஸ்வச் பாரத் பற்றி கவலைப்படாமல் வெறும் கையில் கேக்கை பிய்த்துக் கொடுத்தாரா தமிழிசை? தமிழிசையின் மூக்கில் ஒட்டிய கேக்கை துடைத்துவிடவும், கைக்குட்டையை மடிக்கவும் கட்சிப் பெண்மணியை பயன்படுத்துவதுதான் அரசியல் தலைவருக்கு நாகரிகமா? இவர்கள் இப்படியிருக்கும் நிலையில் திராவிட இயக்கங்களின் அரசியலைப் பற்றி ’சுயநல தலைவர்கள்’ என்று பேச என்ன அருகதை இருக்கிறது?

வீடியோவை பார்த்த மாத்திரத்தில் அது இந்த ஆண்டு கொண்டாடப்பட்டதா அல்லது எந்த ஆண்டு கொண்டாடப்பட்ட பிறந்தநாள் விழா என்பது புரியவில்லை. ஆனால் தமிழிசை பா.ஜ.க.வின் தமிழக தலைவரான பின்னே கொண்டாடப்பட்டதுதான் என்பது ஆடியோ மூலம் புரிகிறது.

இந்த வீடியோ பற்றிய விமர்சனங்களுக்கு ‘தூய்மை இந்தியா திட்டம் துவங்கும் முன் கொண்டாடப்பட்டது’ என்றும் கூட பத்தாம்பசலி தனமாக அவரது ஆதரவாளர்கள் விளக்கம் கொடுக்கலாம். ஆனால் அதற்கும் கேட்கிறோம்....தமிழிசை ஒரு டாக்டர்தானே! ஒரு டாக்டரே இவ்வளவு அலட்சியமாக உணவுப் பண்டத்தை வெறும் கையில் வெட்ட வெளியில் பிய்த்து பிய்த்து குழந்தைகளுக்கெல்லாம் உண்ணக் கொடுக்கலாமா?....என்று போட்டுத்தாக்கி இருக்கிறார்கள்.

அரைமணி நேரத்துக்கு ஒரு முறை அரைத்த மாவையே மீடியாவிடம் அரைத்து பேட்டி கொடுக்கும் தமிழிசை மேடம் இதற்கு என்ன பதில் சொல்லப்போறீங்க? என்றும் விமர்சகர்கள் கேட்கிறார்கள்.

click me!