போலீசார் அடித்ததாலேயே மணிகண்டன் உயிரிழந்தாரா? மர்மத்தை வெளிக்கொண்டு வர இதுதான் ஒரேவழி.. கேப்டன்.!

By vinoth kumarFirst Published Dec 9, 2021, 1:21 PM IST
Highlights

விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட மணிகண்டன் நடக்கக் கூட முடியாத நிலையில் பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டில் 3 முறை ரத்த வாந்தி எடுத்த மணிகண்டன், காலை இறந்த நிலையில் படுக்கையில் கிடந்துள்ளார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். 

மாணவர் மரணத்தில் புதைந்துள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வர ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு குழுவை அமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நீர்கோழியேந்தல் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணக்குமார். இவரது மகன் மணிகண்டன்(21). கல்லூரி மாணவரான இவர், டிசம்பர் 4ம் தேதி மாலை பரமக்குடி - கீழத்தூவல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது வாகனச் சோதனையில் ஈடுபட்ட கீழத்தூவல் போலீசார் மணிகண்டனின் வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால், வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக, மணிகண்டனை போலீசார் விரட்டிச் பிடித்து, விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றுள்ளனர். 

பின்னர் அன்று இரவு மணிகண்டனின் தாயாரை வரவழைத்து அவரை கண்டித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், திடீரென்று நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த மணிகண்டனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு 3 முறை ரத்த வாந்தி  எடுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அவரது பிறப்புறுப்பில் வீக்கம் ஏற்பட்டு இருந்ததாகவும் உறவினர்கள் கூறுகின்றனர். இதனையடுத்து முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு மணிகண்டனை கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மணிகண்டனின் உறவினர்கள், கிராமத்தினர் போலீசார் கொடூரமாக தாக்கியதில்தான் மணிகண்டன் உயிரிழந்தார் உடலை வாங்காமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, மர்மமான முறையில் இறந்ததாக கூறப்படும் முதுகுளத்தூர் கல்லூரி மாணவர் உடலை மறுபிரேத பரிசோதனை  செய்யப்பட்டது. இதனையடுத்து, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், மாணவர் மரணத்தில் புதைந்துள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வர ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு குழுவை அமைக்க வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு குழுவை அமைக்க வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீழத்தூவல் காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் நிற்காமல் சென்ற கல்லூரி மாணவர் மணிகண்டனை விரட்டி பிடித்த போலீசார், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட மணிகண்டன் நடக்கக் கூட முடியாத நிலையில் பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர். வீட்டில் 3 முறை ரத்த வாந்தி எடுத்த மணிகண்டன், காலை இறந்த நிலையில் படுக்கையில் கிடந்துள்ளார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். காவல் நிலையத்தில் வைத்து போலீசார் அடித்ததாலேயே மணிகண்டன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. மேலும் மாணவர் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

எனவே, மாணவர் மரணத்தில் புதைந்துள்ள மர்மத்தை வெளிக்கொண்டு வர ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு குழுவை அமைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, மணிகண்டன் மரணத்துக்கு நீதி கிடைக்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். மாணவர் மணிகண்டனின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை தேசிய முற்போக்கு திராவிட கழகம் வரவேற்கிறது என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

click me!