#BREAKING அமைச்சர் என்பதால் சலுகை கிடையாது.. செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

By vinoth kumarFirst Published Jul 27, 2021, 4:20 PM IST
Highlights

செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இருப்பதால், மின்துறை சம்பந்தப்பட்ட திட்டமிடப்பட்ட கூட்டங்கள் இருந்ததால் அவரால் ஆஜராக முடியவில்லை என்றும், மற்றொரு தேதிக்கு வழக்கை ஒத்திவைக்கும் படியும் கோரிக்கை விடுத்தார்.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் ஆகஸ்ட் 6ம் தேதி ஆஜராக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி. தற்போது, மின்துறை அமைச்சராக உள்ளார். இவர், 2011 - 2015ல் அதிமுக அரசில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வேலை வாங்கி தருவதாகக் கூறி, 81 பேரிடம் 1.62 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சென்னை, அம்பத்துாரை சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர், செந்தில் பாலாஜி உட்பட 4 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

அதன்படி, செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு, சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, எம்.பி., -- எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இருப்பதால், மின்துறை சம்பந்தப்பட்ட திட்டமிடப்பட்ட கூட்டங்கள் இருந்ததால் அவரால் ஆஜராக முடியவில்லை என்றும், மற்றொரு தேதிக்கு வழக்கை ஒத்திவைக்கும் படியும் கோரிக்கை விடுத்தார்.

அதனை ஏற்கமறுத்த நீதிபதி, அமைச்சர் என்பதால் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்கவோ, சலுகை வழங்கவோ முடியாது. சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்று கூறிய நீதிபதி கண்டிப்பாக ஆகஸ்ட் 6ம் தேதி ஆஜராகவும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தது. 

click me!