
டிடிவி.தினகரனை பற்றி பேசவே விரும்பவில்லை என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக இரண்டாக செயல்படுகிறது. இதில், கடந்த ஏப்ரல் மாதம் ஆர்கே நகர் தொகுதியில் நடைபெற இருந்த தேர்தலின்போது, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுத்ததாக அதிமுக பொது செயலாளர் டிடிவி தினகரனை டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
முன்னதாக, பிளவு பட்டுள்ள இரு அணிகளும் மீண்டும் ஒன்று சேர வேண்டுமானால், சசிகலா மற்றும் டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் அணியினர் நிபந்தனை விடுத்தனர். அதை எடப்பாடி அணியினரும் ஏற்று கொள்வதாக அறிவிக்கப்பட்டது.
இதை அறிந்த டிடிவி.தினகரன், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து இரு அணிகளும் இணைவது குறித்த பேச்சு வார்த்தைக்கு அழைப்புவிக்கப்பட்டது. அதற்கு, டிடிவி.தினகரன் கைது செய்யப்பட்டார்.
இதையொட்டி அவர் நேற்று முன்தினம் ஜாமீனில் வெளியேவந்தார். நேற்று சென்னை திரும்பினார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் இருந்து விலகவில்லை. தொடர்ந்து கட்சி பணிகளை செய்வேன் என கூறினார்.
இந்நிலையில், ஈரோடு அடுத்த கோபிச்செட்டி பாளையத்தில், அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி நன்றாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த ஆண்டு மழை 62 சதவீதம் பொய்த்துவிட்டது. இதனால், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும், எடப்பாடி தலைமையிலான அரசு, அதனை சரி செய்வதற்கான அனைத்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் யாருக்கும் எந்த கஷ்டமும் ஏற்பட கூடாது என்ற திட்டத்தில் செயல்படுகிறது.
டிடிவி.தினகரனை பற்றி நான் எதுவும் பேச விரும்பவில்லை. அரசின் தலைமை எடப்பாடி பழனிச்சாமியிடம் இருக்கிறது. அவரே அதை பற்றி கவனித்து கொள்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.