TN Local Body Election: எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் குண்டுக்கட்டாக கைது… கோவையில் உச்சகட்ட பரபரப்பு!!

Published : Feb 18, 2022, 04:09 PM ISTUpdated : Feb 18, 2022, 04:10 PM IST
TN Local Body Election: எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினர் குண்டுக்கட்டாக கைது… கோவையில் உச்சகட்ட பரபரப்பு!!

சுருக்கம்

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.பி.வேலுமனி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். 

நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.பி.வேலுமனி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏக்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்தனர். கோவை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நியாயமாக நடத்தவும், பாதுகாப்பிற்கு துணை இராணுவத்தை வரவழைக்க கோரியும், அதிமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டனர். இதில் வெளியூர் திமுகவினரை வெளியேற்றக் கோரியும், அதிகாரிகள் திமுகவிற்கு சாதகமாக செயல்படுவதை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதில் உடன்பாடு ஏற்படாத நிலையில், அதிமுகவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கோவை மாவட்டம் கலவர பூமியாக மாற்றப்பட்டுள்ளது. வெளியூர் குண்டர்கள், ரவுடிகள் 2 ஆயிரம் பேரை சிறையில் இருந்து விடுதலை செய்து, கோவையில் இறக்கியுள்ளனர். பொது மக்கள் மற்றும் திமுகவை எதிர்ப்பவர்கள் அவர்களால் தாக்கப்பட்டு வருகின்றனர். புகார் அளிக்கும் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடப்படுகிறது. காவல் துறையினரே வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர். விதிமுறைகளை மீறி திமுகவினர் செயல்படுகின்றனர். கோவையில் பல தேர்தல்கள் நடைபெற்று இருந்தாலும், இது போன்ற தேர்தலை சந்தித்தது இல்லை. 20 வருட நிம்மதியை கெடுத்துள்ளனர்.

எல்லா ஊரிலும் ரவுடிகள் உள்ளனர். அதனால் பதட்டமான சூழல் உள்ளது. ஓட்டு போட வருபவர்களை மிரட்டவும், வாக்குப் பெட்டிகளை தூக்கிச் செல்லவும் திட்டமிட்டுள்ளனர். கோவை காவல் துறை மீது நம்பிக்கை இல்லை. காவல் துறை அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட வேண்டும். வெளியூர் ரவுடிகள் வெளியேற்ற வேண்டும். பாதுகாப்பிற்கு துணை இராணுவம் வேண்டும். கோவை மாவட்டத்தில் உள்ள 11 தொகுதியிலும் அதிமுக வெற்றி பெற்றது. அதனால் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் என்ன வேண்டுமானாலும் செய்து அதிமுக வெற்றியை தடுக்க முயற்சிக்கிறார்கள். அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். கோவையில் உள்ள வெளியூர்காரர்களை வெளியேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட வேலுமணி உட்பட அதிமுக எம்.எல்.ஏக்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!