
மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் திமுக, அதிமுக பணத்தை வாரி இறைப்பதை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் வேடிக்கை பார்ப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை நடக்க உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்த நிலையில், வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறாதா என்பதை தேர்தல் பறக்கும்படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அப்படி இருந்த போதிலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி போட்டி போட்டுக்கொண்டு பரிசுப்பொரட்கள், பணம் உள்ளிட்டவைகளை விநியோகம் செய்து வருகின்றனர். இதை காவல் துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் ஆளுங்கட்சி ஆதரவாக செயல்பட்டு வருவதாக அதிமுகவினர் தொடர் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இந்நிலையில், திமுக, அதிமுக பணத்தை வாரி இறைப்பதை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் வேடிக்கை பார்ப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரச்சாரம் ஓய்ந்தவுடன் நேற்று மாலையிலிருந்து தமிழகம் முழுவதும் பணமழை ஆறாக ஓடுவதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.
மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில், ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் வகையில் தி.மு.க மற்றும் பழனிசாமி கம்பெனிகள் பணத்தை வாரி இறைப்பதை மாநில தேர்தல் ஆணையமும், காவல்துறையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது என டிடிவி.தினகரன் தெரிவித்தள்ளார்.