கொங்கு மண்டலம் புறக்கணிப்பு.. தென் மாவட்டங்கள் விரட்டி அடிப்பு... திமுகவில் ஆரம்பமானது புகைச்சல்..!

By Selva KathirFirst Published Sep 12, 2020, 10:29 AM IST
Highlights

திமுக தலைமை கழக நிர்வாகிகள் நியமனத்தில் கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சிக்குள் புகைச்சல் ஆரம்பமாகியுள்ளது.

திமுக தலைமை கழக நிர்வாகிகள் நியமனத்தில் கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சிக்குள் புகைச்சல் ஆரம்பமாகியுள்ளது.

கடந்த 2006 சட்டமன்ற தேர்தல் முதலே திமுகவிற்கு எட்டாக்கனியாக இருப்பது கொங்கு மண்டலம் தான். வலுவான கூட்டணி அமைந்தாலும் கூட கொங்கு மண்டலத்தில் அதிமுகவை திமுகவால் வீழ்த்த முடியவில்லை. கடந்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வர முடியாமல் போனதற்கு கூட கொங்கு மண்டலத்தில் திமுகவிற்கு ஏற்பட்ட பின்னடைவு மிக முக்கிய காரணம். சென்னை, வட மாவட்டங்களில் மட்டுமே திமுக பலம் வாய்ந்த வாக்கு வங்கியை கொண்டிருக்கிறது. ஆனால் கொங்கு மண்டலத்தில் திமுகவால் பெரிய அளவில் வெற்றி பெற முடியவில்லை. இதற்கு காரணம் அங்கு கட்சியில் செல்வாக்கு மிக்க நிர்வாகிகள் இல்லை என்பது தான் என்கிறார்கள்.

இதே போல் தென் மாவட்டங்களிலும் திமுக கூட்டணி கட்சிகள் முதுகில் ஏறித்தான் சவாரி செய்ய வேண்டிய நிலை உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் இருந்தால் மட்டுமே தென் மாவட்டங்களில் திமுகவால் வெற்றி வாகை சூட முடிகிறது. கூட்டணி இல்லாமல் தென் மாவட்டங்களில் திமுகவால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது என்கிற சூழல் உள்ளது. இதனால் தான் கடந்த சட்டமன்ற தேர்தலிலும் சரி நாடாளுமன்ற தேர்தலிலும் சரி தென் மாவட்டங்களில் காங்கிரசுக்கு கூடுதல் தொகுதிகளை கொடுத்து கூட்டணியை தக்க வைத்துக் கொண்டது திமுக.

இப்படி கொங்கு மண்டலத்திலும், தென் மாவட்டங்களிலும் திமுக படு வீக்காக இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது. ஆனாலும் இதனை சரி செய்ய திமுக தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அக்கட்சியின் நிர்வாகிகள் புலம்ப ஆரம்பித்துள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இப்போதும் கூட திமுக தலைமை சென்னை மற்றும் வட மாவட்டங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் அவர்கள் குறைபட்டுக் கொள்கிறார்கள். அண்மையில் திமுக மேலிட நிர்வாகிகள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கும், தென் மாவட்டங்களுக்கும் குறைந்தபட்ச பிரதிநிதித்துவம் கூட இல்லை என்கிற சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.

பொதுச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள துரைமுருகன் வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர். பொருளாளர் ஆகியுள்ள டி.ஆர்.பாலு ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி விழுப்புரத்தை சார்ந்தவர். மற்றொரு துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பெரம்பலூரை சேர்ந்தவர். இப்படி மேலிட நிர்வாகிகள் அனைவருமே வட மாவட்டங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர். போதாக்குறைக்கு அண்ணா அறிவாலயத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் போன்றோரும் சென்னையை சேர்ந்தவர்கள்.

இப்படி கட்சியின் முக்கிய பொறுப்பில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவருக்கு கூட வாய்ப்பு அளிக்காமல் எப்படி கொங்கு மண்டலத்தில் கட்சியை வளர்க்க முடியும் என்று அக்கட்சியை சேர்ந்த தொண்டர்களே கேட்க ஆரம்பித்துள்ளனர். இதே போல் அழகிரி இருந்தவரை தென்மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு கட்சிகளில் உரிய பிரதிநிதித்துவம் இருந்ததாகவும் தற்போது இல்லை என்று கடந்த சில வருடங்களாகவே திமுக தொண்டர்கள் புலம்பி வந்தனர். இந்த நிலையில் மேலிட நிர்வாகிகள் நியமனத்திலும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

சென்னைக்கு அருகாமையில் உள்ளவர், வட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னையிலேயே இருந்து ஸ்டாலினுக்கு நெருக்கமாகிவிடுவதாகவும், தங்களை போன்றவர்கள் அப்படி அடிக்கடி சென்னை வந்து செல்ல முடியாத காரணத்தினால் ஸ்டாலினுடன் நெருங்க முடியவில்லை என்று கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களை சேர்ந்த திமுக புள்ளிகள் கூறுகின்றனர். இதனால் தான் தங்களுக்கு முக்கிய பதவிகள் எதுவும் கிடைப்பதில்லை என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். சென்னையிலேயே இருந்து ஸ்டாலினுக்கு நெருக்கமானால் மட்டும் தான் உயர் பதவி என்றால் ஒரு காலத்திலும் கொங்கு மண்டலத்திலும் சரி தென் மாவட்டங்களிலும்
சரி திமுக வாக்கு வங்கியை உருவாக்க முடியாது என்கிறார்கள்.

அதிமுகவை எடுத்துக் கொண்டால் கொங்கு மண்டலத்தில் எஸ்பி வேலுமணி, தங்கமணி செல்வாக்கு மிக்கவர்களாக திகழ்வதாகவும் தென் மாவட்டங்களில் ஆர்.பி உதயகுமார் அதிகாரம் மிக்கவராக இருப்பதாகவும் வட மாவட்டங்களில் சிவி சண்முகம் ஆதிக்கம் செலுத்துவதாகவும், மத்திய மாவட்டங்களை வைத்திலிங்கம் எம்பி கவனித்துக் கொள்வதாகவும் கூறி அதிமுக அரசியல் பாணியையும் திமுகவினர் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் திமுகவை பொறுத்தவரை தமிழகம் முழுவதுமே எவ வேலு, உதயநிதி, அன்பில் மகேஷ் போன்றோர் தான் ஆதிக்கம் செலுத்துவதையும் சுட்டிக்காட்ட அவர்கள் மறக்கவில்லை.

click me!