நெருங்கும் தேர்தல்.. பொறுமை இழந்த ரசிகர்கள்.. டென்சனில் ரஜினி.. உடைகிறதா மக்கள் மன்றம்?

By Selva KathirFirst Published Sep 12, 2020, 10:18 AM IST
Highlights

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டி என்று அறிவித்த ரஜினி தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் புரட்சி ஏற்பட்டால் தான் அரசியல் கட்சி என்று கூறிவிட்ட நிலையில் அவரது ரசிகர்கள் பொறுமையை இழந்து புரட்சிக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் போட்டி என்று அறிவித்த ரஜினி தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் புரட்சி ஏற்பட்டால் தான் அரசியல் கட்சி என்று கூறிவிட்ட நிலையில் அவரது ரசிகர்கள் பொறுமையை இழந்து புரட்சிக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா, கலைஞர் மறைவை தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப தான் அரசியலுக்கு வர உள்ளதாக அறிவித்தார் ரஜினிகாந்த். அன்று முதல் அவர் எப்போது அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்கிற எதிர்பார்ப்பு எகிறியது. மேலும் தனது ரசிகர் மன்றத்தின் பெயரை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றி நிர்வாகிகள் நியமனம், உறுப்பினர் சேர்க்கை என கடந்த 3 வருடங்களாக சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தார். இடையே தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் தொடர்பாக தனது நிலைப்பாட்டை அறிவித்து தனது அரசியல் வருகை தொடர்பான எதிர்பார்ப்பு அணையாமலும் பார்த்துக் கொண்டார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு தேர்தல் என்கிற நிலையில் தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சி என்று ரஜினி கூறியதால் இந்த ஆண்டு துவக்கம் முதலே அவர் எப்போது அரசியல் கட்சி துவங்குவார் என்று கேள்விகள் எழுந்தன. மேலும் அவர் அரசியல் கட்சி துவங்கினால் தேர்தலில் போட்டியிடமாட்டார் என்றும் முதலமைச்சர் வேட்பாளராக இளைஞர் ஒருவரை ரஜினி அடையாளம் காட்டுவார் என்றும் தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து மீண்டும் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ரஜினி பேசினார். அதனை தொடர்ந்து தனது மன்ற நிர்வாகிகள் செயல்பாட்டில் தனக்கு சிறிய வருத்தம் இருப்பதாக தெரிவித்தார்.

அது என்ன வருத்தம் என்று பல்வேறு விதமான யூகங்கள் எழுந்த நிலையில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, தனக்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்கிற ஆசை இல்லை என்றார். மேலும் படித்த நேர்மையான இளைஞர்களை அரசியலுக்கு தயாராக்கவேண்டியதே தனது கடமை என்றும் தெரிவித்தார். இதனை தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஏற்ககாததால் தான் தனக்கு வருத்தம் என்றும் ரஜினி கூறினார். அதோடு மட்டும் அல்லாமல் பண பலம், அதிகார பலம் பொருந்திய திமுக, அதிமுகவை தேர்தலில் தான் எதிர்கொள்ள வேண்டும் என்றால் மக்கள் மத்தியில் அவர்களுக்கு எதிரான புரட்சி உருவாக வேண்டும் என்றும், அப்படி புரட்சி உருவாகும் போது தான் அரசியலுக்கு வருவதாகவும் கூறிவிட்டு சென்றார் ரஜினி.

இதனால் குழம்பிப்போன ரசிகர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தார். இதற்கிடையே கொரோனா பரவலால் ரஜினியின் அரசியல் வருகை எதிர்பார்ப்பு மட்டுப்பட்டது. ஆனால் கொரோனா தளர்வுகளை தொடர்ந்து மறுபடியும் ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பாரா என்கிற கேள்விகள் எழ ஆரம்பித்தன. நவம்பரில் ரஜினி மதுரையில் மாநாடு போடப்போவதாகவும் பேச்சுகள் அடிபட்டன. இந்த நிலையில் ரஜினி ரசிகர்கள் பல்வேறு இடங்களில் அவரை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்து போஸ்டர்கள் அடித்தனர்.

அதில் சில போஸ்டர்கள் ரஜினியை நேரடியாக அட்டாக் செய்வது போலவும், வஞ்சப் புகழ்ச்சி போலவும் இருந்தது. இதனால் இனி தலைமையின் அனுமதி இல்லாமல் போஸ்டர் அடிக்க கூடாது என்று மன்ற பொறுப்பாளர் சுதாகர் அனைத்து மாவட்டங்களுக்கும் தகவல் அனுப்பினார். ஆனால் இதனையே ரசிகர்கள் சிலர் போஸ்டர் அடித்து ஒட்ட ஆரம்பித்தனர். இது ரசிகர்களின் மனக்குமுறலின் வெளிப்பாடு என்கிறார்கள். கட்சி ஆரம்பிப்பதாக கூறிவிட்டு தற்போது புரட்சி ஏற்பட வேண்டும் என்று ரஜினி கூறுவது எப்படி ஏற்க முடியும்? நாம் கட்சி ஆரம்பித்தால் தான் புரட்சியை ஏற்படுத்த முடியும் என்றும் ரசிகர்கள் கூறுகிறார்கள்.

சில மாவட்ட ரஜினி ரசிகர்கள் இந்த விவகாரத்தில் ரஜினிக்கு வெளிப்படையாக அழைப்பு விடுக்க தயாராகி வருவதாகவும், போயஸ் கார்டனுக்கு நேரடியாக சென்று ரஜினியை சந்திக்க இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதற்கும் பலன் கிடைக்காத பட்சத்தில் செய்தியாளர்களை சந்தித்து ரஜினியின் அரசியல் வருகை குறித்து சில கோரிக்கைகளை முன் வைக்க திட்டமிட்டு வருவதாகவும் சொல்கிறார்கள். இந்த தகவலை முன்கூட்டியே அறிந்து அவர்களை மன்றங்களில் இருந்து நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. அப்படி நிர்வாகிகளை நீக்கும் பட்சத்தில் மக்கள் மன்றம் உடையும் என்று கூறுகிறார்கள் சில நிர்வாகிகள்.

click me!