
தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளில் ஒன்றும், வட தமிழ்நாட்டின் அதிகளவு வாக்கு வங்கி வைத்துள்ள கட்சிகளில் ஒன்றான பாமக-வில் நடக்கும் உட்கட்சி மோதல் அந்த கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
குடும்ப அரசியலுக்கு எதிராக மிகப்பெரிய பரப்புரையை மேற்கொண்ட ராமதாஸின் பாமக இன்று குடும்ப அரசியலாலே சிதைந்து வருகிறது என்றே அந்த கட்சியின் நிர்வாகிகளும் கவலையில் உள்ளனர். தந்தை ராமதாஸிற்கும், மகன் அன்புமணிக்கும் நடக்கும் மோதலை பலரும் முடிவுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
அன்பு மணியின் தாயார் சரஸ்வதி அம்மாளின்ட பிறந்தநாள் சமீபத்தில் தைலாபுரம் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. யாரும் எதிர்பார்க்காத நிலையில் சௌமியாவும் அதில் கலந்து கொண்டார். அன்பு மணியின் சகோதரிகள் அனைவரும் சௌமியாவிடம் அன்பாகப் பேசியிருக்கிறார்கள்.
அப்போது, ‘‘இதுவரைக்கும் நடந்ததெல்லாம் போதும், சமாதானமாகப் போகலாம்’’ என சௌமியா சொல்லி இருக்கிறார்.
சரஸ்வதி அம்மாளிடம், ''இந்தக் குடும்பத்தை நான் பிரிச்சுட்டேனு சொல்றாங்க அத்தை. அப்பாவுக்கும், மகனுக்கும் நான் சண்டையை மூட்டி விட்றாங்கனு சொல்றாங்க. மாமாவே எல்லாத்தையும் பாத்துக்கட்டும். எனக்கு எந்த அரசியல் ஆசையும் கிடையாது. என் மேல பழியை போட்றது நியாயமா? என்று செளமியா அன்புமணி கண்ணீர்விட்டு சரஸ்வதி அம்மாளிடம் அழுதுள்ளார்.
தனது கணவன் - மகன் இடையே நடக்கும் போராட்டத்தை கண்ட சரஸ்வதி அம்மாளும் மனம் கலங்கியுள்ளார். அவர் அப்போது அன்புமணியிடம் ராமதாசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், இந்த ஒரு தேர்தல் மட்டும் தந்தை ராமதாஸ் சொல்வதை கேட்டு நடக்கும்படியும் அன்புமணிக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், அன்புமணியை மீண்டும் தலைவராக மாற்றுவதற்கு ராமதாசிடம் பேசுவதாகவும் ஆறுதல் கூறி இருக்கிறார்.
அங்கிருந்த எல்லோருமே இதற்கு சம்மதம் எனச் சொல்லி இருக்கிறார்கள். இதையே ராமதாஸிடமும் சௌமியா சொல்ல, அவர் பிடி கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டாராம். ராமதாஸ் தன்னுடைய பொதுக்குழுவில் அன்புமணிக்கு எதிராக எதையும் பெரிதாக அறிவித்து விடக்கூடாது என்பது அன்புமணி தரப்பின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், ராமதாஸ், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை அறிவித்தார்.