
சசிகலாவின் அண்ணன் மகனான விவேக் ஜெயராமனுக்குச் சொந்தமான, சென்னை, கிண்டியில் உள்ள ஜாஸ் சினிமாஸ், சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மிடாஸ் மது ஆலைகள், ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் பத்திரிகை என பல்வேறு இடங்களில் ஐடி ரெய்டு நேற்று காலை முதல் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் 187 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் 40 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை முடித்துக் கொண்டதாகவும், மீதமுள்ள 147 இடங்களில் தொடர்ந்து 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை தொடர்பாக பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.
சோதனை என்கிற பெயரில் சசிகலா சாம்ராஜ்யத்தின் மீது மோடி அரசு நடத்தியிருக்கும் சர்ஜிக்கல் அட்டாக் என்று தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. வருமான வரித்துறையின் இந்த சோதனை, தமிழக அமைச்சர்களிடமும் ஒருவித நடுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு குறித்தும், அமைச்சர்கள் குறித்தும் பல தகவல்கள், மத்திய புலனாய்வு துறையினர், பிரதமர்
அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தபடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சர்கள் ஒவ்வொருவரும் செய்து வரும் ஊழல்கள், சொத்துக்கள், பினாமி நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகள் என பல தகவல்களையும் திரட்டி டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி தொடங்கி ஒவ்வொரு அமைச்சருக்கும் தனித்தனியாக ஃபைல் தயாரித்து வைத்துள்ளதாக தெரகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த வார சென்னை வந்திருந்தபோது அரசு மீதுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து எச்சரிக்கை செய்து விட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், சசிகலா குடும்பத்தினர் மீது நடத்தப்பட்டு வருமான வரித்துறையின் சோதனைகள், அமைச்சர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சசிகலா குடும்பத்தின் மீதான நடவடிக்கைகளை அடுத்து, அடுத்து அமைச்சர்கள் குறி வைத்துதான என்று தகவல் வெளியாகி உள்ளது.