
சசிகலாவின் உறவினருக்கு சொந்தமான வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் செயல்பட்டு வரும் ஜாஸ் சினிமாஸ் தியேட்டரில் 2-வது நாளாக இன்றும் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை இன்றும் தொடர்வதால் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சசிகலா குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் நாடு முழுவதும் 187 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று அதிகாலை தொடங்கிய இந்த சோதனை இன்றும் நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையின்போது, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 187 இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையின் சோதனை 47 இடங்களில் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 147 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை, பீனிக்ஸ் மாலில் செயல்பட்டு வரும் ஜாஸ் சினிமாசிலும், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நேற்று அதிகாலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று ஜாஸ் சினிமாசில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை காரணமாக நேற்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. இதனை அடுத்து, சினிமா பார்ப்பதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்த நபர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் ஜாஸ் சினிமாஸ் நிர்வாகம் கூறியிருந்தது.
இந்த நிலையில், ஜாஸ் சினிமாஸ்-ல் இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று காலை முதல் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக இன்றும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. முன்பதிவு செய்தவர்களின் பணம் திருப்பி அளிக்கப்படும் என்று நேற்று ஜாஸ் சினிமாஸ் நிர்வாகம் கூறியது போலவே இன்று முன்பதிவு செய்தவர்களுக்கு பணம் திருப்பி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.