
சசிகலாவுடன் தொடர்புடைய அனைவரின் வீடு மற்றும் அலுவலகங்கள் என 147 இடங்களில் இரண்டாவது நாளாக இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
போலி நிறுவனங்கள் நடத்தி நஷ்ட கணக்கு காட்டி வரி ஏய்ப்பு செய்தது தொடர்பாக சசிகலாவின் உறவினர்கள், நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று 187 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 40 இடங்களில் சோதனை முடிந்துவிட்ட நிலையில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து இரண்டாவது நாளான இன்று 147 இடங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால், சென்னை அடையாறில் உள்ள தினகரனின் வீட்டிலும் பெசண்ட் நகரில் உள்ள நடராஜனின் வீட்டிலும் சோதனை நடத்தப்படவில்லை.
அதேநேரத்தில் தினகரனின் மனைவி அனுராதா நடத்திவரும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
சென்னை அடையாறில் தினகரன் மனைவி அனுராதா, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். அடையாறு வீட்டில் சோதனை செய்யாத வருமான வரித்துறை, இந்த தினகரன் மனைவியின் நிறுவனத்தில் அதிரடியாக சோதனை நடத்திவருகின்றனர்.
சசிகலாவுடன் தொடர்புடையவர்களின் 317 வங்கிக் கணக்குகளையும் அதிகாரிகள் ஆய்வு செய்துவருகின்றனர்.
இதுவரை நடைபெற்றிருக்கும் சோதனையில், 60 போலி நிறுவனங்கள் குறித்த ஆவணங்களையும் ரூ. 1012 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்திருப்பதற்கான ஆவணங்களையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.