மோடி அரசு மீது சோனியா கடும் தாக்கு - 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு தயாராக அழைப்பு ...

 
Published : Jun 07, 2017, 09:18 AM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
மோடி அரசு மீது சோனியா கடும் தாக்கு - 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு தயாராக அழைப்பு ...

சுருக்கம்

Sonia against Modi government - Inviting for the 2019 annual general election

டெல்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற் குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய சோனியா, மோடி தலைமையிலான மத்திய அரசு மீது கடும் தாக்குதல் தொடுத்தார். 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு தயாராகும்படியும், கட்சித் தொண்டர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

செயற் குழு

காங்கிரஸ் கட்சியின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அமைப்பான செயற் குழு கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில், அவருடைய இல்லத்தில் இந்த கூட்டம் நடைபெற்றது.

விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கட்சித் தலைவராக ராகுல் காந்தி பதவி உயர்த்தப்படலாம் என்ற சூழ்நிலையில் நடைபெற்ற இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

கட்சித் தேர்தல்

எதிர்பார்த்தபடி, தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதுடன், குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. கட்சியின் அமைப்பு தேர்தல் நடைமுறைகளுக்கும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.

இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்குத் தடை உள்ளிட்ட பிரச்சினைகளில் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் பேசிய சோனியா மத்திய அரசுக்கு எதிராக கடும் தாக்குதல் தொடுத்தார். அவர் கூறியதாவது-

மாண்புகளை அழிக்கும் முயற்சி

‘‘இந்தியாவின் மாண்புகளை அழிக்கும் முயற்சியில் மத்தியில் ஆளும் பா.ஜ.அரசு ஈடுபட்டு உள்ளது. பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வருவது மட்டுமல்லாமல், வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பும் சரிந்து வருகிறது.

எங்கெல்லாம் அமைதி இருந்ததோ, தற்போது அங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. பொறுமை இருந்த இடத்தில் அத்துமீறல் நடக்கிறது. பொருளாதார ஸ்திரத்தன்மை இருந்த நிலையில் தேக்கநிலை காணப்படுகிறது.

பொதுத் தேர்தல்

இந்தியாவின் மாண்புகளையும், கொள்கைகளையும் அழிக்க நினைக்கும் மத்திய அரசிடமிருந்து அதனை பாதுகாக்க வேண்டும். 2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை சந்திக்க கட்சித் தொண்டர்கள் தயாராக வேண்டும்’’.

இவ்வாறு சோனியா கூறினார்.

காஷ்மீர் பிரச்சினை

மத்திய அரசின் மாபெரும் தோல்வியும், மத்திய - மாநில அரசுகள் பிரச்சினைகளை கையாண்ட விதமுமே காஷ்மீரில் நிலவும் தற்போதைய நெருக்கடிக்கு காரணமாகும் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

தொழில் அதிபர் விஜய் மல்லையா மற்றும் லலித் மோடி ஆகியோரை குறிப்பிடும் வகையில், ‘‘இந்த ஆட்சிக்கு வேண்டியவர்கள் மட்டுமே கடந்த மூன்று ஆண்டுகளில் அபரிமிதமாக வளர்ச்சி அடைந்துள்ளனர்; அல்லது சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி வெளிநாட்டிற்கு தப்பி ஒடி விட்டனர்’’ என்றும் சோனியா குற்றம் சாட்டினார்.

ராகுல்- மன்மோகன் சிங்

கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரும், ‘‘வெற்று விளம்பர கோஷங்களை தவிர உண்மையில் எந்த சாதனைகளையும் செய்யவில்லை’’ என்று மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசினார்கள்.

ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், ப.சிதம்பரம், அகமது பட்டேல், அம்பிகா சோனி, திக்விஜய்சிங், ஜனார்த்தன் துவிவேதி போன்ற மூத்த தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டம் முடிந்ததும் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பதிவில், ‘‘காஷ்மீர் பிரச்சினை, மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, குடியரசு தேர்தல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக’’ கூறி இருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!