முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலால் சமுதாயம் சீர்கெடும் நிலை... கே.எஸ்.அழகிரி பகீர்..!

By Selva KathirFirst Published May 22, 2021, 10:36 AM IST
Highlights

ஏழு பேரும் தமிழர்கள் என்பதற்காக விடுதலை செய்ய வேண்டும் என்றால் தமிழக சிறையில் 100க்கும் மேற்பட்ட தமிழ் கைதிகள் 25 வருடங்களுக்கும் மேலாக வாடி வருகின்றனர், தமிழர்கள்என்கிற அடிப்படையில் அவர்களையும் விடுதலை செய்ய வேண்டியது தானே என்று அழகிரி கேள்வி எழுப்பினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயலால் சமுதாயம் சீர்கெடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 வருடங்களாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்கு 30 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிறையில் பேரறிவாளனோடு அடைபட்டுகிடக்கும் நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு தமிழர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூடி தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானம் தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வசம் உள்ளது.

2018ம் ஆண்டு தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்று ஏழு பேரையும் விடுதலை செய்ய குடியரசுத் தலைவர் ஆவண செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த கடிதத்தை டி.ஆர்.பாலு நேரடியாக சென்று குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார். இந்த நிலையில் ராஜீவ் காந்தியின் 30வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அழகிரியிடம், ஏழு பேர் விடுதலை தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அழகிரி, ஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பதை காங்கிரஸ் ஏற்காது என்று கூறியுள்ளார். சிறைக்கைதிகள் விடுதலை என்பது நீதிமன்றத்தால் மட்டுமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் அரசியல் அழுத்தங்கள் அடிப்படையில் கைதிகளை விடுதலை செய்வது நல்லது அல்ல என்று கூறியுள்ளார். ஏழு பேரை தமிழரக்ள் என்று கூறி விடுதலை செய்ய முயற்சிக்கும் அரசியல் கட்சிகள் அந்த ஏழு பேரும் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டதை மறந்துவிடக்கூடாது என்று அழகிரி தெரிவித்துள்ளார்.

ஏழு பேரும் தமிழர்கள் என்பதற்காக விடுதலை செய்ய வேண்டும் என்றால் தமிழக சிறையில் 100க்கும் மேற்பட்ட தமிழ் கைதிகள் 25 வருடங்களுக்கும் மேலாக வாடி வருகின்றனர், தமிழர்கள்என்கிற அடிப்படையில் அவர்களையும் விடுதலை செய்ய வேண்டியது தானே என்று அழகிரி கேள்வி எழுப்பினார். அரசியல் அழுத்தங்கள், தமிழர்கள் என்றெல்லாம் கூறி சிறையில் இருக்கும் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய ஆரம்பித்தால் சமுதாயம் சீரழிந்துவிடும். மேலும் இந்த ஏழு பேரை தமிழர்கள் என்கிற ஒரே காரணத்திற்காக விடுதலை செய்வதுது தவறான முன் உதாரணம் ஆகி சமுதாயத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அழகிரி கூறியுள்ளார்.

அதாவது ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்கிற மு.க.ஸ்டாலின் முடிவால் சமுதாயம் சீரழியும் நிலை உள்ளது என்று கே.எஸ்.அழகிரி வெளிப்படையாக கூறியுள்ளார்.

click me!