இதுவரை நாட்டில் 162 மருத்துவர்கள், 107 செவிலியர்கள் கொரோனாவுக்கு பலி.. சுகாதாரத்துறை அமைச்சர் அதிர்ச்சி தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Feb 2, 2021, 5:10 PM IST
Highlights

இந்நிலையில் இது குறித்து  நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இதுவரை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்ட 162 மருத்துவர்களும், 107 செவிலியர்கள் மற்றும் 44 ஆஷா தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக கூறியுள்ளார்.  

இதுவரை கொரோனா வைரஸால் நாடுமுழுவதும் 162  மருத்துவர்களும் 107 செவிலியர்கள் மற்றும் 44 ஆஷா தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தெற்காசியாவிலேயே அதிக உயிரிழப்பு  சந்தித்த நாடாக இந்தியா உள்ளது.  இதற்கான எழுத்துப்பூர்வமான தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். உயிரிழந்த அனைவருமே தீவிர கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் ஆவர்.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது, அது இந்தியாவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்தியாவில் 1.7 கோடி பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 1.4 கோடி பேர் குணமடைந்துள்ளனர். நாடுமுழுவதும் 1.54 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் 1.60 லட்சம் நோயாளிகள் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக முன்னெடுத்ததன் விளைவாக தற்போது அதன் தாக்கம் படிப்படியாக குறைந்துள்ளது. 

கடந்த திங்கட்கிழமை அன்று 8,579 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அன்று ஒரே நாளில் சுமார் 13 ஆயிரத்து 443 பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். அன்று ஒரே நாளில் நாடு முழுவதும் 94 பேர் உயிரிழந்தனர், உயிரிழப்பு எண்ணிக்கையைப் பொறுத்தவரையில் கடந்த 271 நாட்களில்  இதுவே குறைந்த எண்ணிக்கையாகும். இதற்கு முன்னர் மே 6ஆம் தேதி 96 பேர் உயிரிழந்தது குறைந்த எண்ணிக்கையாக பதிவாகி இருந்தது. இந்த தொற்று நோயால் கடந்த 24 மணி நேரத்தில் 12 மாநிலங்களிலும், மூன்று யூனியன் பிரதேசங்களிலும் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என்பது ஆறுதல் தரும் விஷயமாக பார்க்கப்படுகிறது.  ஆனால் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் மட்டும் அதிக எண்ணிக்கையிலான தொற்று, மற்றும் இறப்புகள் பதிவாகிவருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் இந்த இரண்டு மாநிலங்களிலும் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

 

இந்நிலையில் இது குறித்து  நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் இதுவரை நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்ட 162 மருத்துவர்களும், 107 செவிலியர்கள் மற்றும் 44 ஆஷா தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதாக கூறியுள்ளார். தெற்காசியாவில் அதிக  உயிரிழப்பை சந்தித்த நாடாக இந்தியா உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். உலக அளவில் உயிரிழப்பை பொருத்தவரையில் இந்தியா 18வது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், மெக்சிகோ, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் போன்ற நாடுகளில் அதிக அளவிலான இறப்புகள் பதிவாகி வருகின்றன. மற்ற பெரிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் தொற்று தற்போது கணிசமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் 8 முதல் 15,000 வரை நோய்தொற்று பதிவாகி வருகிறது. அதேநேரத்தில் அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் 20 ஆயிரம் முதல் 1.25 லட்சம் புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!