ஸ்மார்ட் கார்டு இல்லைனாலும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்..! உணவுத்துறை உத்தரவாதம்..!

First Published Dec 8, 2017, 12:03 PM IST
Highlights
smart ration card issue and food department explanation


ஸ்மார்ட் கார்டுகள் இல்லாதவர்களுக்கு வரும் ஜனவரி முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படாது என்ற தகவல் பொய்யானது என தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் நடக்கும் முறைகேடுகளை தவிர்க்க ஸ்மார்ட் ரேஷன் கார்டு கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இ-சேவை மையங்கள் மூலமாகவும் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 60% பேருக்கு மட்டுமே இதுவரை ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் கார்டுகளில் தொடர்ந்து குழப்பங்கள் நீடிப்பதால் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. நடிகையின் புகைப்படம், செருப்பு, ஆண் பெயருக்கு பெண் படம், பிள்ளையார் படம் என பல குளறுபடிகள் நடந்தன. குளறுபடிகள் காரணமாக இன்னும் 40%பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை.

டிசம்பருடன் கடைசி தமிழகத்தில் இ-சேவை மையங்கள் மூலமும், பொதுவிநியோகத்துறை மூலமும் அதிக பிழைகளோடு வழங்கப்பட்ட 3 லட்சத்து 20 ஆயிரம் கார்டுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஸ்மார்ட் கார்டு பெறாத அட்டைதாரர்கள் இந்த மாதத்திற்குள் தங்களுக்கான ஸ்மார்ட் ரேஷன் கார்டு பெற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. 

இந்நிலையில், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணிகளை வரும் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வைத்திருப்போருக்கு மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவல் பரவியது.

ஆனால், ஸ்மார்ட் கார்டுகள் இருப்போருக்கு மட்டுமே வரும் ஜனவரி முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்ற தகவலில் உண்மையில்லை. அது பொய்யான தகவல். ஸ்மார்ட் கார்டுகள் இல்லாதவர்களுக்கும் ஜனவரி முதல் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும் ஆனால், டிசம்பர் இறுதிக்குள் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் எனவும் உணவுத்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
 

click me!