ராஜ்ய சபாவில் விரைவில் 6 தமிழக எம்.பி. பதவிகள் காலி... திமுக, அதிமுகவில் மல்லுக்கட்டு தொடக்கம்!

By Asianet TamilFirst Published Jan 8, 2020, 10:13 AM IST
Highlights

அதிமுகவைச் சேர்ந்த முத்துக்கருப்பன், சசிகலா புஷ்பா, செல்வராஜ், விஜிலா சத்யானந்த், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, சிபிஎம்-மைச் சேர்ந்த டி.கே. ரங்கராஜன் ஆகியோர் பதவி காலம் முடிகிறது. தற்போதைய சபை எண்ணிக்கையின் அடிப்படையில் அதிமுக, திமுகவுக்கு தலா 3 இடங்கள்  கிடைக்கும் நிலை உள்ளது. கடந்த ஆண்டு 6 பதவிகள் காலியானபோது அதிமுக தனது ஓரிடத்தை அன்புமணிக்கும், திமுக வைகோவுக்கும் வழங்கின.
 

தமிழகத்திலிருந்து 6 மாநிலங்களை பதவிகள் விரைவில் காலியாக உள்ள நிலையில், அந்தப் பதவிகளைக் கைப்பற்றும் போட்டி திமுக அதிமுகவில் தொடங்கியுள்ளது.
 நாடாளுமன்றம் மாநிலங்களையில் (ராஜ்ய சபா) இந்த ஆண்டு 69 எம்.பிகளின் பதவிகள் காலியாக உள்ளன. தமிழகத்திலிருந்து 6 இடங்கள் வரும் ஏப்ரல் மாதம் காலியாக உள்ளன. அதிமுகவைச் சேர்ந்த முத்துக்கருப்பன், சசிகலா புஷ்பா, செல்வராஜ், விஜிலா சத்யானந்த், திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா, சிபிஎம்-மைச் சேர்ந்த டி.கே. ரங்கராஜன் ஆகியோர் பதவி காலம் முடிகிறது. தற்போதைய சபை எண்ணிக்கையின் அடிப்படையில் அதிமுக, திமுகவுக்கு தலா 3 இடங்கள்  கிடைக்கும் நிலை உள்ளது. கடந்த ஆண்டு 6 பதவிகள் காலியானபோது அதிமுக தனது ஓரிடத்தை அன்புமணிக்கும், திமுக வைகோவுக்கும் வழங்கின.
இந்த முறை திமுகவில் 3 பதவிகளும் அக்கட்சிக்கே கிடைக்க உள்ளன. திருச்சி சிவா மாநிலங்களவை திமுக  தலைவராக இருப்பதால், அவருக்கு திமுக தலைமை மீண்டும் அந்தப் பதவியை வழங்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு வைகோ எம்.பி. பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தபோது, ஒரு வேளை அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டால், அதை எதிர்கொள்ள வசதியாக மாற்று வேட்பாளராக திமுக வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ வேட்பு மனு தாக்கல் செய்தார். வைகோ வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதால், என்.ஆர். இளங்கோ மனுவை வாபஸ் பெற்றார். எனவே இந்த முறை அவருக்கு எம்.பி. பதவி கிடைக்கும் என திமுகவில் பேசப்படுகிறது.
கடந்த முறை கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்த வில்சனுக்கு திமுக எம்.பி. பதவி வழங்கியதால், இந்த முறை இஸ்லாமிய சமுதாயத்துக்கு எம்.பி. பதவி வழங்கப்படும் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேபோல கொங்கு பெல்ட்டில் திமுகவை வலுப்படுத்தும் வகையில், அந்தப் பகுதியைச் சேர்ந்தவருக்கு எம்.பி. பதவி வழங்க வேண்டும் என்ற யோசனையும் திமுகவில் வைக்கப்பட்டுள்ளது.
முத்தலாக், 370 சட்டப் பிரிவு, சிஏஏ போன்ற சட்டங்களுக்கு அதிமுக ஆதரவு அளித்ததன் மூலம் சிறுபான்மையின மக்கள் அதிமுகவின் மீது அதிருப்தியில் இருந்துவருகிறார்கள். அந்த அதிருப்தியைப் போக்கும் வகையில் சென்ற ஆண்டு முகமது ஜானுக்கு எம்.பி. பதவி வழங்கியதுபோல, இஸ்லாமிய சமுதாயத்துக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கும் யோசனை அதிமுக இருப்பதாகக் கூறப்படுகிறது. மூத்தத் தலைவர் தம்பித்துரை, மைத்ரேயன் உள்ளிட்ட தலைவர்களும் எம்.பி. பதவியைப் பெற ஆர்வம் காட்டிவருகிறார்கள். அதிமுக கூட்டணியில் உள்ள தமாகா, வாசனுக்கு எம்.பி. கேட்டு ஆளுங்கட்சியை அணுகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மாநிலங்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே இரு கட்சிகளிலும் பதவிகளைக் கைப்பற்ற போட்டிகள் தொடங்கியிருக்கின்றன.

click me!