மீண்டும் சாதி கணக்கெடுப்பை கையிலெடுக்கும் ராமதாஸ்..! அரசுக்கு அதிரடி கோரிக்கை..!

By Manikandan S R SFirst Published Jan 8, 2020, 10:01 AM IST
Highlights

தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பலமாநிலங்களில் இடஒதுக்கீடு சதவீதம் தமிழகத்தை விட அதிகமாக உயர்த்தப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்திலும் ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழகத்தில் மட்டும் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிா்த்து 1994-ஆம் ஆண்டு சில தொண்டு நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தன. அந்த வழக்கில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், 69 சதவீத இட ஒதுக்கீடு தொடரலாம். இட ஒதுக்கீடு தேவை என்பதை நியாயப்படுத்துவதற்காக அடுத்த ஓராண்டுக்குள் தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது. அதன்பின், 10 ஆண்டுகளாக கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதன் விளைவாக 69 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் எந்த நேரமும் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம். அப்போது, தமிழகத்தில் இடஒதுக்கீட்டுப் பிரிவினரின் மக்கள்தொகை விவரம் தாக்கல் செய்யப்படாவிட்டால், 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படக்கூடும். இத்தகைய சூழலில், உடனடியாக ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதைத் தவிர, தமிழகத்தின் இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க வேறு வழியே இல்லை.

கால் நூற்றாண்டுக்கு முன் இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், இப்போது மகாராஷ்டிரத்தில் 78, சத்தீஸ்கரில் 72, ஹரியாணாவில் 70 சதவீதம் என பல மாநிலங்களில் தமிழகத்தைவிட அதிக இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், தமிழகத்திலும் இட ஒதுக்கீட்டைத் தேவைக்கு ஏற்ற வகையில் உயா்த்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே, தமிழகத்தில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

click me!