
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை முன்கூட்டியே உணர்த்தும் வகையில் தான், சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்யப்பட்டதாக பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை அடுத்த சிவன்மலையில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலின் சிறப்பு அம்சமாக, 'ஆண்டவன் உத்தரவு' பெட்டி என்ற ஒரு பெட்டி உள்ளது.
பக்தர்தகளின் வேண்டுதல் அடிப்படையில் ஏதாவது, ஒரு பக்தரின் கனவில் தோன்றும் சிவன் மலை ஆண்டவர், குறிப்பிட்ட பொருளை உத்தரவு பெட்டியில் வைத்து, பூஜை செய்யுமாறு கட்டளையிடுவார் என நம்பப்படுகிறது.
இதையடுத்து அந்த பக்தர் கோவிலுக்கு வந்து ஆண்டவனிடம் பூ கேட்டு அனுமதி பெற்று, அதன்பின், உத்தரவு பெட்டியில் பொருள் வைக்கப்பட்டு மீண்டும் பூஜை செய்யப்படும் என கூறப்படுகிறது.
அந்த பொருள், அடுத்த உத்தரவு வரும் வரை, பெட்டியில் இருக்கும் என்றும் அந்த பொருள் தொடர்பான ஏதாவது ஒரு தாக்கம் ஏற்படுவதாகவும், பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
முன்பு ஒரு முறை ஆண்டவன் உத்தரவு பெட்டியில், துப்பாக்கி வைத்து பூஜை செய்தபோது, சீனா போரும், நீர் வைத்து பூஜித்த போது, சுனாமியும் வந்தது என பக்தர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 10 ம் தேதி முதல், ஆண்டவர் உத்தரவு பெட்டியில், இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்டோருக்கு, சிறை தண்டனையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தீர்ப்பை, முன்கூட்டியே உணர்த்தும் வகையில் தான், சிவன்மலை ஆண்டவர், இரும்பு சங்கிலி வைத்து பூஜிக்க உத்தரவிட்டதாக எண்ணி பக்தர்கள் பரவசமடைந்துள்ளனர்.