
தமிழகத்தில் ஆட்சி அமைக்க முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அல்லது எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரில் யாருக்கு அழைப்பு விடுப்பது குறித்து, சட்ட வல்லுநர்கள் கருத்துக்கள் அடிப்படையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நடவடிக்கை எடுப்பார் என்ற தெரியவந்துள்ளது.
கடந்த 5-ந்தேதி முதல்வர்பதவியை ஓ.பன்னீர் செல்வம் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து, ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு, சட்டவல்லுநர்களான முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜி, மோகன் பராசரன் மற்றும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகல் ரோகத்கி ஆகியோரின் ஆலோசனைகளை கேட்டு வருகிறார்.
இதில் ஆலோசனை அளித்த இரு சட்ட வல்லுநர்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 1998ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரே கட்சியைச் சேர்ந்த இரு பிரிவினரையும் ஒன்றாக அழைத்து கருத்துக்கேட்கப்பட்டதை தமிழகத்திலும் செயல்படுத்த வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
கடந்த 1998-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் ஒரே கட்சியை சேர்ந்த கல்யான் சிங், ஜகதாம்பிகா பால் இடையே இதே போன்ற சூழல் ஏற்பட்டது. அப்போது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், சிறப்பு கூட்டத்தை கூட்டத்தை கூட்டி, இருவரில் யாருக்கு பெரும்பான்மை என்பதை தீர்மானிக்க, அங்கேயே ஒரே சமயத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதைப் பின்பற்றி தமிழகத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
மேலும், பெரும்பான்மை யாருக்கு இருக்கிறது என்பதை அறிய சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும், தாமதம் செய்யக்கூடாது. ஒருவாரத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று சோலி சொராப்ஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், “ சட்டவல்லுநர்களான சோலி சொராப்ஜி, முகல் ரோகத்கி, மோகன் பராசுரன்ஆகியோர் அளித்த ஆலோசனையின் அடிப்படையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மிகவிரைவாக முடிவு எடுப்பார்'' எனத் தெரிவிக்கின்றன.