சிவகாசி என் கோட்டை.. இங்கு நான்தான் போட்டியிடுகிறேன், தில் இருந்தால் மோதிபார்.. அமைச்சர் கேடிஆர் அதிரடி பேச்சு

By Ezhilarasan BabuFirst Published Dec 3, 2020, 11:34 AM IST
Highlights

என்னை எதிர்த்து சிவகாசி தொகுதியில் யார் நின்றாலும் கவலை இல்லை... போட்டின்னு வந்து விட்டால் களத்தில் கம்பு சுற்றி தான் ஆகவேண்டும், யார் நின்றாலும் என்னைத்தவிர வேறு யாரும் இங்கு வெற்றி பெற முடியாது.

சிவகாசி சட்டமன்ற தொகுதிகள் அதிமுக வேட்பாளரை தவிர வேறு யாரும் வெற்றி பெற முடியாது என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தில்லாக தெரிவித்துள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைப்பதற்கான காய் நகர்த்தும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. எந்தக் கட்சியுடன் யார் கூட்டணி என்பது ஓரளவுக்கு உறுதியாகியுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கான அடிப்படை வேலைகளில்  கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இந்நிலையில் அதிமுக அமைச்சர்கள் கிளை, ஒன்றியம், வட்டம் என அடிமட்ட கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கி வருகின்றனர். அந்த வரிசையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே செந்நெல்குடியில் பால்வளத் துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:  அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இணைந்து கிளைச் செயலாளர், மாவட்ட செயலாளர், அமைச்சர், முதலமைச்சர் என படிப்படியாக உயர்ந்தவர் தான் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் திமுகவில் அப்படி இல்லை, ஸ்டாலின், ஸ்டாலினுக்கு அடுத்து அவரது மகன் உதயநிதி ஸ்டாலின்தான் என்ற நிலை உள்ளது. அந்த கட்சியில்  பழம்பெரும் தலைவர்கள் உள்ள நிலையில், ஸ்டாலினின் மகன்  உதயநிதி தான் சினிமாவில் நடித்துவிட்டு நேரடியாக திமுகவிற்குள் நுமைந்து  சீனியர்களை எல்லாம் ஆட்டிப் படைக்கிறார். 

அவர் ஸ்டாலினின் தோளில் அமர்ந்து கொண்டுள்ளார்,  திமுகவில் உள்ள பழம்பெரும் தலைவர்களெல்லாம், உதயநிதி ஸ்டாலினிடம் கைகட்டி நிற்கிறார்கள், ஆனால் அந்த நிலை அதிமுகவுக்கு ஏற்படாது, நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன், என்னை எதிர்த்து சிவகாசி தொகுதியில் யார் நின்றாலும் கவலை இல்லை... போட்டின்னு வந்து விட்டால் களத்தில் கம்பு சுற்றி தான் ஆகவேண்டும், யார் நின்றாலும் என்னைத்தவிர வேறு யாரும் இங்கு வெற்றி பெற முடியாது. இவ்வாறு கே.டி ராஜேந்திர பாலாஜி கூறினார்.

click me!