அந்த 41 தொகுதி! தலையை சொறிந்த காங்கிரஸ்! முகத்தில் அடித்த திமுக! ஸ்டாலின் – குண்டுராவ் சந்திப்பு பின்னணி!

By Selva KathirFirst Published Dec 3, 2020, 11:15 AM IST
Highlights

திமுக கூட்டணி சரி வரவில்லை என்றால் 3வது அணி என்கிற எண்ணத்தில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச வந்த காங்கிரஸ் நிர்வாகிகளை முகத்தில் அடித்தாற்போல் கூறி திமுக தலைமை திருப்பி அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மட்டும் காங்கிரஸ் எட்டு இடங்களை வெல்லவில்லை என்றால் அகில இந்திய அளவில் அந்த கட்சிக்கு மிகப்பெரிய தர்மசங்கடம் ஏற்பட்டிருக்கும். கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து தான் காங்கிரசுக்கு தற்போது நாடாளுமன்றத்தில் அதிக எம்பிக்கள் உள்ளனர். இந்த இரண்டு மாநிலங்களிலுமே அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. எனவே இரண்டு மாநிலங்களிலும் கவுரவமான இடங்களில் வென்று காங்கிரசின் செல்வாக்கை தூக்கி நிறுத்த வேண்டும் என்று அக்கட்சியின் மேலிடம் கணக்கு போட்டு வருகிறது.

கேரளாவை பொறுத்தவரை அங்கு மறுபடியும் காங்கிரஸ் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை திமுக மனது வைத்தால் தான் காங்கிரஸ் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற முடியும். ஆனால் கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுக்கு 41 தொகுதிகளை திமுக ஒதுக்கிய நிலையில் 33 இடங்களில் அந்த கட்சியின் வேட்பாளர்கள் தோல்வியை தழுவினர். இதனால் தான் கடந்த முறை அதிமுக ஆட்சிக்கே வர முடிந்தது. இதே போல் பீகாரிலும் கூட 70 தொகுதிகளில் போட்டியிட்டு 50 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது.


தமிழகத்தில் 2016ல் நடந்ததை போன்றே 2020ல் பீகாரில் எதிர்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாமல் போக காங்கிரசுக்கு தாரைவார்க்கப்பட்ட தொகுதிகள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே உஷாரான திமுக இந்த முறை கடந்த முறை கொடுத்த தொகுதிகளில் பாதி அளவு மட்டுமே கொடுக்க முடியும் என்றும் அதிலும் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் வேட்பாளர்களைஅறிவிக்க வேண்டும் இல்லை என்றால் அந்த தொகுதிகளில் திமுக வேட்பாளரை நிறுத்த நேரிடும் என்று திட்டவட்டமாக காங்கிரஸ் தரப்பிடம் கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் இந்த முறை நிச்சயம் திமுக கூட்டணியில் கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்காது என்பதை காங்கிரஸ் தலைவர்கள் உணர்ந்துள்ளனர். எனவே சட்டப்பேரவை தேர்தலில் வேறு என்ன என்ன வாய்ப்புகள் உள்ளன என்பதை காங்கிரஸ் ஆராய ஆரம்பித்துள்ளது. அதில் மிக முக்கியமானது கமலுடன் கூட்டணி வைத்து 3வது அணி அமைப்பதாகும். இப்படி ஒரு முடிவை எடுக்க திமுகவின் இறுதி ஆஃபர் என்ன என்பதை தெரிந்து கொள்ள காங்கிரஸ் முடிவெடுத்து ஸ்டாலினை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சந்திக்க நேரம் கேட்கப்பட்டது.

கடந்த ஒரு வார காலமாகவே காங்கிரஸ் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நேற்று தான் குண்டுராவ் சந்திக்க திமுக தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனை அடுத்து பெங்களூரில் இருந்து அவசரமாக சென்னை வந்த குண்டுராவ் நேற்று மாலை ஸ்டாலினை சந்தித்து பேசினார். சுமார் 20 நிமிடங்கள் மட்டுமே இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த முறை கொடுத்த 41 தொகுதிகள் தங்களுக்கு கண்டிப்பாக வேண்டும் என்று தினேஷ் குண்டுராவ் ஸ்டாலினிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அத்துடன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 8 இடங்களில் வென்றதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தலில் வேறு 38 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலில் வென்றாலும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெல்ல முடியாததை திமுக தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் தற்போதுள்ள செல்வாக்கு மற்றும் கள நிலவரத்தை தெரிந்து கொண்டு தொகுதிப் பங்கீடு குறித்து பேச வருமாறு குண்டுராவிடம் மூஞ்சில் அடித்தது போல் ஸ்டாலின் கூறிவிட்டதாக சொல்கிறார்கள். இதனால் தான் பேச்சுவார்த்தை வெறும் 20 நிமிடங்களில் முடிந்துவிட்டது என்கிறார்கள். எது எப்படியோ 41 தொகுதிகள் என்பதில் இருந்து காங்கிரஸ் இறங்கி வராது என்கிறார்கள். இதே போல் திமுகவும் கூட காங்கிரசுக்கு 41 தொகுதிகளை வழங்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் என்கிறார்கள்.

click me!