
சென்னை மாநகர மேயர் பிரியா பேச வாய்ப்பு கொடுக்கவில்லை என கூறி அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய உடன் சொத்து வரி உயர்த்தப்பட்டதை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் முழக்கம் எழுப்பினர். அப்போது மேயர் பிரியா, வாய்ப்பு கொடுக்கும்போது பேசுங்கள், அதுவரை அமைதியா உட்காருங்கள் என கூறினார். இதனால் மேலும் கொந்தளிப்படைந்த அதிமுக கவுன்சிலர்கள் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சி மேயராக தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் பட்டதாரி பிரியா ராஜன் மேயராக பொறுப்பேற்றுள்ளார். அந்த வகையில் சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று பிரியா தலைமையில் நடைபெற்றது. அப்போது மேயர் பிரியா கருப்பு நிற அங்கியுடன் மாமன்றத்திற்கு வந்தார். முன்னதாக அவர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார். அவர் மாமன்றத்திற்குள் நுழையும் போது அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று மரியாதை செலுத்தனர். கூட்டத்தில் துவக்கத்தில் திருக்குறள் ஒன்றை குறிப்பிட்டு அதற்கான விளக்க உரையை வழங்கினார். தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரையும் தீண்டாமை உறுதிமொழி எடுக்க கூறினார்.
அதைத்தொடர்ந்து 2022- 2023 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை அவர் வாசிக்க ஆரம்பித்தார். அவர் பேசத் தொடங்கியவுடன் அதிமுக உறுப்பினர் சத்யநாதன் எழுந்து நின்று சென்னை மாநகராட்சி சொத்து வரி உயர்த்தப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கம் எழுப்பினார். பட்ஜெட் உரையை வாசிப்பதற்கு முன்பாக சொத்து வரி உயர்வை பற்றி பேசுங்கள் என்றார், அப்போது ஆவேசமடைந்த மேயர் பிரியா உங்களுக்கு வாய்ப்பு தருகிறோம், வாய்ப்பு கொடுக்கும் போது பேசுங்கள் அதுவரை நீங்கள் அமைதியாக இருங்கள் உங்களுக்கு வாய்ப்பு தரப்படும் என கூறினார். ஆனால் அவருடன் சேர்ந்து அதிமுக உறுப்பினர்கள் ராஜேஷ், ஸ்ரீதரன், கார்த்திக் உள்ளிட்ட பலரும் சொத்து வரிக்கு எதிராக பதாகைகளை ஏந்தி மாமன்றத்தில் கூச்சலிட்டனர். இதனால் மாமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் 15 பேரும் சொத்து வரி உயர்வை கண்டித்து கோஷமிட்டபடி வெளியேறினார், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய 145வது வார்டு கவுன்சிலர் சத்தியநாதன், இதுவரை இல்லாத அளவுக்கு சென்னை மாநகரில் மிக மிக அதிகமான சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. 600 சதுர அடிக்கு மேல் உள்ள வீட்டிற்கு 150 சதவீதம் வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை வெறும் 3 ஆயிரம் ரூபாய் கட்டியவர்கள் வருடத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் வரி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகரத்தின் பட்டியலின மக்கள், அருந்ததியின மக்கள், உழைக்கும் தொழிலாளர்கள் அதிகமாக உள்ளனர். இந்த வரி உயர்வால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இந்த வரி உயர்வால் வீடு வாடகை உயரும், தண்ணீர் கட்டணம் உயரும் என்றார்.
தமிழக சட்டமன்றத்தில் முதல் கூட்டத்தில் எங்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சொத்து வரி உயர்வுக்கு எதிராக குரல் கொடுத்தனர். எங்கள் தலைவர்களின் ஆலோசனை கேட்டு தமிழக முதல்வருக்கு மறுபரிசீலனை செய்ய வேண்டும், சொத்து வரி குறைக்கப்படும் வரை எங்களது போராட்டம் ஓயாது என்றபடி அதிமுக கவுன்சிலர்கள் சொத்து வரிக்கு எதிராக முழக்கமிட்டனர்.