
கடந்த ஆண்டு நடைபெற்ற அதிமுக உட்கட்சித் தேர்தலில் ஓ. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் ஜூன் 23 அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து அதிமுக நிர்வாகிகள் கட்சி தலைமையகத்தில் கூடி ஆலோசனை நடத்தி வந்தனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “ஒற்றைத் தலைமை குறித்து ஆலோசனை நடைபெற்றது. ஆனால், யார் அந்த ஒற்றைத் தலைமை என்பதை விவாதிக்கவில்லை” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கு ஓபிஎஸ்ஸே பொருத்தமானவர் என்றும் ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் என்றெல்லாம் போஸ்டர்கள் அடித்து அவருடைய ஆதரவாளர்கள் சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஒட்டினர். இதேபோல எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாகவும் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவு போஸ்டர்களை அடித்து ஒட்டி வருகிறார்கள். மேலும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் தினந்தோறும் கூடி இந்த விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள். ஓபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தனியாகவும் இபிஎஸ் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தனியாகவும் ஆலோசனை நடத்தி வருவதால், அதிமுகவில் உச்சக் கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பொதுக்குழு கூடுவதற்கு சில தினங்களே உள்ள நிலையில் இந்தப் பிரச்சனை எழுந்ததால் ஓபிஎஸ் தரப்பு மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறது. பிரச்சனைக்குக் காரணம் ஜெயக்குமார்தான் என்று அவர் மீது தங்களுடைய கோபத்தை காட்டி வருகிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள். இதற்கிடையே கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஓபிஎஸ்ஸையும் இபிஎஸ்ஸையும் தனித்தனியாகச் சந்தித்து பேசி ஆலோசனை நடத்தி வருகிறார்கள். கடந்த 2020ஆம் ஆண்டில் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யவும் இதேபோலத்தான் அதிமுக நிர்வாகிகள் மாறிமாறி பேசி ஆலோசனை நடத்தினார்கள். தற்போது அதே காட்சிகள் மீண்டும் திரும்பியுள்ளன.
ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவில் பெரும் பேசுபொருளாகி உள்ள நிலையில், ஓ. பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையே சமாதான முயற்சிகளையும் கட்சி நிர்வாகிகள் தொடங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக எடப்பாடி பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் சந்தித்து பேசினால், பிரச்சினை தீர்ந்துவிடும் என்றும் கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுகவின் மூத்த தலைவர் பொன்னையனும் முன்னாள் எம்.பி. டாக்டர் மைத்ரேயனும் இந்தக் கருத்தைத் தெரிவித்திருந்தார்கள். ஓபிஎஸ் - இபிஎஸ் இருவரும் சந்தித்து பேச நிர்வாகிகளும் அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். ஒற்றைத் தலைமை பிரச்சனை எழுந்த பிறகு ஓபிஎஸ்ஸும் இபிஎஸ்ஸும் சந்தித்து பேசவில்லை என்ற கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து பேச தயார் என்று ஓபிஎஸ் ஏற்கனவே தெரிவித்துவிட்டார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமியிடம் இருந்து இதுவரை ரியாக்ஷன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.