
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்து அரசியல் களத்தை அதிரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முதல் கைது அமைச்சர் செந்தில் பாலாஜி தான் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் பேட்டி அளித்திருந்த நிலையில் அதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். அண்ணாமலை படித்த முட்டாளாக இருப்பதாகவும் முட்டாள்களிலேயே நம்பர் 1 முட்டாளாக அவர் இருப்பதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி கடுமையான விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி;- சில பேர் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கறந்த பால் மடி புகாது. அதேபோல நீங்கள் சொன்னவரின் கனவு ஒருபோதும் பலிக்காது. நோட்டாவுடன் போட்டி போடுபவர்கள் அவர்கள். கோவையில் 100 வார்டுகளில் போட்டியிட்டனர். ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. கரூரில் அவர் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் என நீங்கள் கேட்க வேண்டும். இவ்வளவு வீர வசனம் பேசுபவர் அரவக்குறிச்சியில் ஏன் மண்ணைக் கவ்வினார்?
அரவக்குறிச்சியில் ஓட்டுக்கு ரூ.1,000 பணம் கொடுத்தனர். அந்தப் பணம் எங்கிருந்து வந்தது. ஐ.பி.எஸ் ஆபிஸராக இருந்த போது சம்பளத்தில் சேர்த்து வைத்த பணமா? இல்லை ஆட்டுக்குட்டி மேய்த்ததில் வந்த பணத்தையா கொடுத்தாரு? நேர்மையான அதிகாரி போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கினார். விளம்பரத்துக்கும் வேலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. நாங்கள் வேலையில் இருக்கிறோம். அவர் வெட்டி விளம்பரத்தில் இருக்கிறார்.
வெறும் நான்கு எம்எல்ஏக்களை வைத்துக் கொண்டு பிரதான எதிர்க்கட்சி பாஜக என சொல்வதையெல்லாம் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அவர் மட்ட ரகமான அரசியல்வாதி. உள்ளாட்சி தேர்தல் நடத்துவது மாநில தேர்தல் ஆணையம். ஆனால் மத்திய தேர்தல் ஆணையத்துக்கு பதிவு போட்டவர் அவர். படித்த முட்டாள்களில் அவர் நம்பர் 1 முட்டாள் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.