
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் காவலர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழ்நாட்டில் காவலர்கள் கண்ணியம் குறையாமல் பணியாற்றுவதை உறுதி செய்வதற்காக, அவர்களுக்கு குறித்தக் காலத்தில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்பது அனைத்துத் தரப்பினரின் நிலைப்பாடு ஆகும். ஆனால், காவலர்களுக்கு 7 ஆண்டுகளில் தொடங்கி 20 ஆண்டுகளுக்குள் 3 பதவி உயர்வுகள் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு இன்னும் நிறைவேற்றாதது கண்டிக்கத்தக்கது.
இதையும் படிங்க: அதிமுக கூட்டணிக்கு ஓகே சொன்ன பாமக, தேமுதிக.? அண்ணாமலைக்கு ஷாக் கொடுத்த அன்புமணி, பிரேமலதா
2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், இரண்டாம் நிலைக் காவலர்களாக பணியில் சேருவோருக்கு 7 ஆண்டுகளில் முதல்நிலைக் காவலர்களாகவும், பத்தாண்டுகளில் தலைமைக் காவலர்களாகவும், 20 ஆண்டுகளில் சிறப்பு உதவி ஆய்வாளர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது. தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையில், பல்வேறு நிலைகளில் காவலர்களாக பணியாற்றி வந்தவர்கள் தங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இன்று வரை பதவி உயர்வு குறித்த அவர்களின் எதிர்பார்ப்பை அரசு நிறைவேற்றவில்லை.
ஒரு மாநிலம் முன்னேற வேண்டுமானால் அதற்கான அடிப்படைத் தேவை அங்கு சட்டம் & ஒழுங்கும், பொது அமைதியும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான். அந்த அடிப்படைத் தேவையை நிறைவேற்றித் தருபவர்கள் காவலர்கள் தான். மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும், அமைதிக்கும் காரணமாக இருப்பவர்களை கவுரவப்படுத்த வேண்டியது அரசின் கடமை ஆகும். ஆனால், அவர்களை கவுரவப்படுத்தவும், கண்ணியம் காக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பது தான் உண்மையாகும். பத்தாண்டுகளுக்கு முன்பு வரை காவலராக பணியில் சேரும் ஒருவர் 30 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்தாலும் காவல் அதிகாரி என்ற நிலையை எட்ட முடியாமல் தலைமைக் காவலராகவே ஓய்வு பெறும் அவல நிலை இருந்தது.
இந்த நிலையை மாற்ற வேண்டும், காவலராக பணியில் சேருபவர்கள் அதிகாரி நிலையில் ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் இரண்டாம் நிலைக் காவலர்களாக பணியில் சேருவோர் பத்தாண்டுகளின் நிறைவில் முதல்நிலைக் காவலராகவும், 15-ஆம் ஆண்டின் நிறைவில் தலைமைக் காவலர்களாகவும், 25-ஆம் ஆண்டின் முடிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகவும் பதவி உயர்வு வழங்கும் திட்டத்தை 2006-11 ஆட்சிக் காலத்தில் கலைஞர் செயல்படுத்தினார். இது வரவேற்பைப் பெற்றாலும் கூட, சற்று அதிக வயதில் காவலராக பணியில் சேர்ந்தவர்களால் சிறப்பு உதவி ஆய்வாளர் என்ற நிலையை அடையை முடியவில்லை. அவர்களின் மனக்குறையை களையும் நோக்குடன் தான் திமுக இந்த வாக்குறுதியை அளித்திருந்தது.
ஆனால், வழக்கம் போலவே மற்ற வாக்குறுதிகளுடன் சேர்த்து காவலர்களின் பதவி உயர்வு தொடர்பான வாக்குறுதியையும் நிறைவேற்ற தமிழக அரசு தவறி விட்டது. தமிழக அரசில் பெரிய துறையாக கருதப்படுவது வருவாய்த் துறை ஆகும். வருவாய்த்துறை உள்ளிட்ட எந்தத் துறையிலும் கடைநிலை பணியில் சேருபவர்கள் சராசரியாக 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி உயர்வைப் பெற்று அதிகாரிகள் நிலையில் ஓய்வு பெறுகின்றனர். ஆனால், காவல்துறையில் மட்டும் இந்த வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. காவலராக பணியில் சேருபவர் காவலராகவே பணி ஓய்வு பெறுவது கொடுமை. இது மாற்றப்பட வேண்டும்.
திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. தமிழக அரசு நினைத்தால் ஒரே அரசாணையில் இந்த வாக்குறுதியை நிறைவேற்றலாம். இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதால் சிறிய தொகை மட்டும் தான் அரசுக்கு கூடுதலாக செலவாகும். இதைத் தவிர தமிழக அரசுக்கு வேறு எந்த சுமையும் ஏற்படாது. அதே நேரத்தில் இந்த வாக்குறுதியை நிறைவேற்றினால், 1999 ஆம் ஆண்டில் பணியில், சேர்ந்த 1100 பேர், 2002-ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த 3000 பேர், 2003-ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த 11,000 பேர் என 15,000 பேருக்கு சிறப்பு உதவி ஆய்வாளராக பதவி உயர்வு கிடைக்கும்.
இதையும் படிங்க: என்னது! 3 ஆண்டுகளில் 60,567 பேருக்கு வேலைவாய்ப்பா? கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களே முதல்வரே! அன்புமணி ராமதாஸ்!
கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலானவர்களுக்கு முதல் நிலைக் காவலராகவும், தலைமைக் காவலராகவும் பதவி உயர்வு கிடைக்கும். இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் செய்யப்படும் ஒவ்வொரு நாள் தாமதமும் பதவி உயர்வை எதிர்நோக்கியிருக்கும் காவலர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் நிதிநிலை அறிக்கையில் காவலர்களுக்கு காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.