
அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் ஃபேஸ்புக்கில் அதிரடியாகக் கருத்துகளைக் கூற ஆரம்பித்திருக்கிறார். நேற்று முன்தினம் அவர் தன்னுடைய ஃபேஸ்புக் பதிவில், “பதவியில் இருந்து ஓய்வுபெற்ற மாவட்ட ஆட்சியர் தன் பழைய அலுவலகத்துக்கு வந்தால், அவருக்கு பழைய மதிப்பு, மரியாதை கிடைக்காது. இளவரசர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கனடா சென்ற இங்கிலாந்து இளவரசர் ஹாரியை யாரும் கண்டுகொள்ளவில்லை. அமெரிக்கா சென்ற அவருக்கு, பணம் கொடுத்தால்தான் பாதுகாப்பு தரமுடியும் என்று கூறிவிட்டது அந்நாட்டு அரசு. அங்கு தங்குவதற்கு மனைவியின் குடியுரிமையை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
‘மாவட்ட ஆட்சியரின் நாய் இறந்துவிட்டால் பெரும் கூட்டம் வந்து விசாரிக்கும். ஆனால், மாவட்ட ஆட்சியரே இறந்துவிட்டால் யாரும் வரமாட்டார்கள்’ என்பார்கள். ‘அவரே போய்விட்டார். துக்கத்துக்கு போனால் என்ன, போகாவிட்டால் என்ன’ என்று இருந்து விடுவார்கள். இதுதான் வாழ்க்கை, இதுதான் உலகம். ஒரு பதவி, பொறுப்பில் இருக்கும்போது நமக்கு கிடைக்கும் மரியாதைகளை, தனிப்பட்ட நமக்கு கிடைத்ததாக எடுத்துக்கொண்டு மகிழ்ச்சி அடையக் கூடாது. அந்த மரியாதை நமக்கானவை அல்ல என்பது தெரிந்தால், அவை நம்மைவிட்டு போன பிறகும் வருத்தப்பட மாட்டோம்.” என்று மைத்ரேயன் தெரிவித்திருந்தார்.
1999-ஆம் ஆண்டில் அதிமுகவில் இணைந்த மைத்ரேயனுக்கு 2001 சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பு அளித்தார். அந்தத் தேர்தலில் மைத்ரேயன் தோல்வி அடைந்த அவருக்கு 3 முறை மாநிலங்களவை பதவியை ஜெயலலிதா வழங்கினார். அதிமுக வரலாற்றில் யாருக்கும் இந்த அளவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டதில்லை. அந்தப் பதவிக் காலம் முடிந்த பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட மைத்ரேயன் விரும்பினார். ஆனால், அந்தத் தொகுதி ஜெயக்குமார் மகனுக்கே மீண்டும் வழங்கப்பட்டது.
சட்டப்பேரவைத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட மைத்ரேயன் விரும்பினார். இதற்காக 6 மாதங்களுக்கு முன்பிருந்தே தயாரானார். அந்தத் தொகுதியும் அவருக்குக் கிடைக்கவில்லை. கட்சியிலும் அவருக்கு பெரிய பொறுப்புகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஓபிஎஸ் அணியில் இருந்துவிட்டு அதிமுக இணைந்த பிறகு, ‘அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை’ என்று பரபரப்பாக கருத்து கூறியவர்தான் மைத்ரேயன். சில தினங்களுக்கு முன்புகூட ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது பதவி இல்லை என்றால் யாரும் மதிக்கமாட்டார்கள் என்ற ரீதியில் பதிவிட்டுள்ளார்.