
தமிழக பா.ஜ.க வழக்கறிஞர் பிரிவின் மாநில செயற்குழு கூட்டம் பூந்தமல்லி அருகே நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேசுகையில், “சமுதாயத்தில் நெருக்கமாகப் பழக்கக்கூடிய வாய்ப்பு வழக்கறிஞர்களுக்கு அதிகம் உண்டு. இதேபோல வழக்கறிஞர்களுக்கும் அரசியலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நாட்டில் பல முக்கிய பதவிகளில் வழக்கறிஞர்கள் இருந்திருக்கிறார்கள். தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தே தீரும். இது காலத்தின் கட்டாயம். தீயினால் சுடப்பட்டு, சமுதாயத்தால் அசிங்கப்படுத்தப்பட்டு தொடர்ந்து மக்கள் சேவையில் இருப்பவர்கள்தான் பெரிய தலைவர்களாக வர முடியும்.
அடைகாத்த கோழி போல, பொத்தி பொத்தி வளர்க்கப்படும் உதயநிதியால் தலைவராக முடியாது. திமுகவில் பொத்தி பொத்தி வளர்க்கப்படும் யாருமே தலைவராக முடியாது. 2024-ஆம் ஆண்டில் இந்தியா ஒரே கட்சியை, பா.ஜக-வை நோக்கி சென்று கொண்டிருக்கும். அப்போது பாஜக 400 எம்பிகளை பெறப்போவதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. சுயநலத்துக்காக தலைவர்கள் இருப்பதை மக்கள் ஏற்க மாட்டார்கள். உங்களுடைய வேலையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்யுங்கள். அதற்கான பதவி உங்களை தேடி வரும்” என்று அண்ணாமலை பேசினார்.