ஸ்டாலினுக்கு ஷாக் ட்ரீட்மென்ட் ரெடி! கொளத்தூரிலும் ஆய்வு!  பன்வாரிலாலின் மாஸ்டர் பிளான்!

First Published Jul 2, 2018, 9:08 PM IST
Highlights
shock plan to staline by Governer ready to inspection kolathur constittuency


தமிழகத்தில் எங்குமே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள கூடாது என்று ஸ்டாலின் மிரட்டி வரும் நிலையில் ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியிலேயே ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள அதிரடியாக திட்டம் தீட்டியுள்ளார் ஆளுநர்.

ஆளுநராக பொறுப்பேற்றது முதல் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று தூய்மை இந்தியா பணிகளை பன்வாரிலால் ஆய்வு செய்து வருகிறார். மேலும் மாவட்ட அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை கூட்டமும் ஆளுநர் நடத்துகிறார். இது மாநில சுயாட்சிக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி ஸ்டாலின் உத்தரவை ஏற்று ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஆளுநர் செல்லும் போது தி.மு.கவினர் கருப்புக் கொடி காட்டுகின்றனர்.

திருப்பூரில் கருப்புக் கொடி போராட்டத்தின் போது ஆளுநர் சென்ற வாகனத்தின் மீது தி.மு.கவினர் கருப்புக் கொடிகளை வீசியதால் பிரச்சனை உருவானது. அந்த போராட்டத்தில் பங்கேற்ற தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டாலின் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்.

மேலும் ஆளுநர் இனி மாவட்டங்களுக்கு ஆய்வு செய்யச் சென்றால் தடுத்து நிறுத்தப்போவதாகவும் ஸ்டாலின் அறிவித்தார். இதனால் கோபம் அடைந்த ஆளுநர் மாளிகை, ஆளுநர் பன்வாரிலால் ஆய்வுப்பணிகளை தடுக்க முயன்றால் ஏழு ஆண்டுகள் சிறைதண்டனைக்கு வழிவகை செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது. இதன் பின்னர் தான் ஸ்டாலின், இனி ஆளுநர் ஆய்வுப் பணிக்கு சென்றால் தானே நேரடியாக சென்று கருப்புக் கொடி காட்ட உள்ளதாக அறிவித்தார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை நேரடியாக எதிர்கொள்ள ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். ஸ்டாலினின் இந்த முடிவு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் கோபத்தை மேலும் தூண்டியுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்டந்தோறும் சென்று தான் மேற்கொள்வது வெறும் ஆய்வு மட்டுமே என்று ஸ்டாலினிடம் நேரடியாக எடுத்துக்கூறியும் தன்னை தடுக்க தி.மு.க முயற்சிப்பதை ஆளுநரால் ஏற்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.

இதனால் ஸ்டாலினுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க ஆளுநர் தயாராகியுள்ளார். முதற்கட்டமாக தனது ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று ஆளுநர் பன்வாரிலால் அதிரடியாக முடிவெடுத்துள்ளார். இதன் மூலம் ஸ்டாலின் மிரட்டல்களுக்கு தான் பயப்படப்போவதில்லை என்பதுடன் தனது ஆய்வு தொடரும் என்று தி.மு.கவிற்கு நெற்றிப் பொட்டில் அடித்தால் போல் ஒரு செய்தியை சொன்னது போல் ஆகிவிடும் என்றும் ஆளுநர் கணக்கு போடுகிறார்.

கொளத்தூருக்கு புரோஹித் செல்லும் பட்சத்தில் தி.மு.கவினர் அதனை கடுமையாக எதிர்ப்பார்கள் என்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே பன்வாரிலால் எப்படி தனது திட்டத்தை நிறைவேற்றப்போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

click me!