
மறைந்த முன்னால் முதல்வர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனின் மறைவுக்கு மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவியாளராகப் பணியாற்றிய பூங்குன்றன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் 1969-ஆம் ஆண்டில் உதவியாளராக சேர்ந்தவர் சண்முகநாதன். அவருடைய சுருக்கெழுத்துப் பணியைப் பார்த்து முதல்வராக இருந்த கருணாநிதி, விரும்பி தன்னிடம் அழைத்துக்கொண்டார். அன்று முதல் கருணாநிதி மறைந்த 2018 ஆகஸ்ட் வரை உதவியாளராக இருந்தார் சண்முகநாதன். கருணாநிதியின் நிழல் என்றழைக்கப்படும் அவருடன் எல்லா தருணங்களிலும் அவருடைய அரசியல் வாழ்க்கையின் சாட்சியாக இருந்தவர்தான் சண்முகநாதன். அவருடைய மறைவு திமுக தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அவருடைய மறைவுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். இதேபோல திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமின்றை பிற கட்சித் தலைவர்களும் சண்முகநாதனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் உதவியாளராகப் பணியாற்றிய பூங்குன்றனும், சண்முகநாதனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
அதில், “48 ஆண்டுகள் உதவியாளர் பணி. அப்பாடா! அதுவும் தமிழகத்தின் உச்சகட்ட அதிகாரம் உள்ள இடத்திலா! ஒருநாள் போவதே யுகமாக தோன்றும் இடத்தில் முடியுமா? ஆச்சரியம்தான். பலர் பார்த்து வியந்த நிழல். மனமறிந்து செயல்பட்டு, கண்ணசைவில் தனது தலைவரின் நோக்கங்களை செயல்படுத்திய மதிப்பிற்குரிய சண்முகநாதன் வணக்கத்திற்குரியவர். எல்லோரையும் சமாளித்து நம்பிக்கை பெற்று பலருக்கும் உதவியவர். இன்று நிரந்தர உறக்கத்தை தழுவிக் கொண்டுள்ளார். உதவி ஆளனாய் ஆண்ட இவரின் மறைவு வருத்தத்தை தருகிறது. அவரை நேசிக்கும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாறட்டும்.” என்று பதிவிட்டுள்ளார்.