
கோவையில் முதல்வர் மு.க. ஸ்டாலினும் அவருடைய மூத்த சகோதரர் மு.க. அழகிரியும் ஒரே இடத்தில் இருந்தபோதும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளவில்லை.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இளைய மகன் மு.க.தமிழரசுவின் மாமியாருமான ஜெயலட்சுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு கோவையில் நேற்று காலமானார். வடவள்ளியில் வைக்கப்பட்ட ஜெயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை தமிழக முதல்வரும் மு.க. தமிழரசுவின் சகோதருமான மு.க.ஸ்டாலின் கோவை வந்தார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் வருவதற்கு முன்பு, ஸ்டாலின், தமிழரசுவின் அண்ணன் அழகிரி துக்க நிகழ்வில் பங்கேற்க கோவை வந்தார். நேராக வீட்டுக்கு வந்த அவர் ஜெயலட்சுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அங்கேயே இருந்தார். அந்த நேரத்தில்தான் முதல்வர் ஸ்டாலினும் அங்கு வந்தார்.
ஜெயலட்சுமியின் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியபோது அந்த வீட்டின் வளாகத்தில்தான் மு.க. அழகிரியும் இருந்தார். எனவே இருவரும் சந்தித்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஸ்டாலின் - அழகிரி சந்திப்பு நடைபெறவில்லை. ஸ்டாலினும் அழகிரியும் ஒரே வீட்டில் 45 நிமிடங்கள் இருந்தபோதும் அவர்கள் சந்தித்துக்கொள்ளாமலே திரும்பிச் சென்றனர். மேலும் ஜெயலட்சுமியின் உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியபோது உதயநிதி ஸ்டாலின், சகோதரி செல்வியும் இருந்தார்கள். தமிழக அமைச்சர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
2014-ஆம் ஆண்டில் திமுகவிலிருந்து மு.க. அழகிரி நீக்கப்பட்ட பிறகு அவருக்கும் மு.க. ஸ்டாலினுக்கும் இடையே உறவு சரியாக இல்லை. மு.க. ஸ்டாலினுக்கு எதிராக தொடர்ந்து மு.க. அழகிரி கருத்து தெரிவித்து வந்தார். கருணாநிதி மறைவின்போது அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்திக்க இருவரும் ஒன்றாக சென்றனர். அதன் பின்னர் மீண்டும் இருவருக்கும் இடையே சந்திப்பு நிகழ்வில்லை. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஸ்டாலினை நினைத்து பெருமைப்படுவதாக மு.க. அழகிரி தெரிவித்திருந்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் அழகிரியின் மகன் தயாநிதி மகள் கயல்விழியும் பங்கேற்றனர். என்றாலும், அதன் பிறகும் சகோதரர்கள் சந்திப்பு இன்னும் நடக்காமலேயே உள்ளது.