வெள்ளச் சேதங்களை பார்வையிட தனி ஆவர்த்தனம்... ஓபிஎஸ்-ஈபிஎஸ் இடையே உச்சத்தில் புகைச்சல்..?

By Asianet TamilFirst Published Nov 14, 2021, 9:30 PM IST
Highlights

அண்மையில் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றி தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்று ஓபிஎஸ் கூறியிருந்தார். இதற்கு எடப்பாடி பழனிச்சாமியும் அவர்களுடைய ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

வெள்ளச் சேதங்களை அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் தனித்தனியாக பார்வையிட்டு வருவது விமர்சனத்தை கிளப்பியுள்ள நிலையில், அதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் விளக்கியுள்ளார்.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் அதிமுக வழங்கி வருகிறது. இந்த ஆய்வை முன்னாள் முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி தனியாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனியாகவும் சென்று வருகிறார்கள். அண்மையில் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது பற்றி தலைமைக் கழக நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்று ஓபிஎஸ் கூறியிருந்தார்.

இதற்கு எடப்பாடி பழனிச்சாமியும் அவர்களுடைய ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால், ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே புகைச்சல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளச் சேதங்களை பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் தனித்தனியாக பார்வையிட்டு வருவது, அவர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுதான் காரணம் என்ற விமர்சனமும் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம் இதுபற்றி விளக்கம் அளித்திருக்கிறார்.

சென்னையில் தியாகராயர் நகர், சூளைமேடு ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்ட பிறகு பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நானும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக நிவாரணம் வழங்கி வருவது குறித்து சிலர் விமர்சனம் எழுப்புகிறார்கள். எங்களுக்குள் எந்த விதமான பாகுபாடும் கிடையாது. பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு நிவாரண பொருட்களை தனித்தனியாக வழங்கி வருகிறோம். இதனை விமர்சிப்போர் பார்வையில்தான் தவறு உள்ளது” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 

மேலும் அவர் கூறுகையில், “தமிழகத்தில் பெய்த கனமழை, அதிக காற்று காரணமாக மீனவர்களின் படகுகள் சேதமடைந்துள்ளன. பொதுமக்கள் பெரும் துயரத்தை அடைந்திருக்கிறார்கள். தமிழக அரசு இதில் தனி கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கான இழப்பீடை உடனடியாக தர வேண்டும்.” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
 

tags
click me!