
அதிமுகவில் தமக்கு முக்கியத்துவம் இல்லாத நிலையில் விரக்தியில் இருந்த முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ வுமான செந்தில் பாலாஜி திமுகவில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிமுகவின் கடந்த ஆட்சி காலத்தில், போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, கட்சியிலும், ஆட்சியிலும் மிகுந்த செல்வாக்கோடு திகழ்ந்தார்.
ஜெயலலிதாவுக்கு நெருக்கடி வந்தால், பன்னீர்செல்வத்திற்கு நிகராக, முதல்வர் பொறுப்பில் அமரும் பட்டியலில் இருந்தவர்களில் இவரும் ஒருவர்.
ஆனால் ஒரே நாளில் அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்தும், கட்சி பொறுப்பில் இருந்தும் நீக்கி, தடயம் தெரியாமல் தூக்கி அடித்தார் ஜெயலலிதா.
கடந்த தேர்தலில் கூட, கரூர் தொகுதியில் அவருக்கு சீட் கொடுக்காமல் அரவக்குறிச்சி தொகுதியின் வேட்பாளராக அறிவித்தார் ஜெயலலிதா.
அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டதால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதுதான், தேர்தலில் வெற்றி பெற்று செந்தில் பாலாஜி எம்.எல்.ஏ ஆனார்.
அதற்கு முன்பாகவே, கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கரை போக்குவரத்து துறை அமைச்சராக நியமித்தார் ஜெயலலிதா.
எனவே, கரூர் மாவட்டத்தில், செந்தில் பாலாஜிக்கு இருந்த செல்வாக்கு சரிந்து, அந்த இடத்தை, மாவட்ட செயலாளராகவும், அமைச்சராகவும் இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தக்கவைத்து கொண்டார்.
செந்தில் பாலாஜி முன்னாள் அமைச்சராகவும், எடப்பாடி ஆதரவாளராகவும் இருந்தாலும், அவரை மாவட்டத்தில் உள்ள அதிமுகவினர் கொஞ்சம் கூட சீண்டுவதில்லை.
இந்நிலையில், தமது முக்கியத்துவத்தை நிலைநிறுத்தும் வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, கரூரில் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கான இடத்தை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து செந்தில் பாலாஜி உண்ணாவிரதம் இருந்தார்.
இப்போது உண்ணாவிரதம் இருக்கும் செந்தில் பாலாஜி, ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, போராட வேண்டியதுதானே என்று, அமைச்சர் விஜயபாஸ்கர் பதிலடி கொடுத்து அதை அப்படியே அடக்கி விட்டார்.
இதனால் கடும் விரக்தியில் உள்ள செந்தில் பாலாஜியை இழுக்க திமுக ஏற்கனவே முயற்சி செய்தது. ஆனால் அவர் அதை ஏற்கவில்லை.
மேலும் கரூரில் கே.சி.பழனிசாமிக்கு நிகராக திமுகவில் யாரும் இல்லை. அவருக்கு வயதான காரணத்தால், செந்தில் பாலாஜி திமுகவுக்கு வந்தால், அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி கொடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், செந்தில் பாலாஜி, எந்நேரமும் தமது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, திமுகவில் ஐக்கியமாக தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.