அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி 33 நாட்களுக்கு பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கான மருத்துவமனையில் வைத்து மருத்துவர்கள் குழு கண்காணித்து வருகிறது.
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது
அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் 81 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஒரு கோடியே 67 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை பல்வேறு கட்டங்களை கடந்த நிலையில், அமலாக்கத்துறை கடந்த மாதம் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தி கைது செய்தது. அப்போது அவருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இருதய பகுதியில் அடைப்பு இருப்பதால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய அறிவுறுத்தினர். இதனையடுத்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்தது.
புழல் சிலையில் செந்தில் பாலாஜி
இதனையடுத்து அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததையடுத்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்த கால கட்டத்தில் செந்தில் பாலாஜிக்கு இரண்டு முறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது. கடைசியாக 12 ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக செந்தில் பாலாஜியை நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்ட நிலையில், ஜூலை 26 ஆம் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்தநிலையில் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சரியானதையடுத்து தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை புழல் சிறைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் மாற்றப்பட்டார். செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு 33 நாட்களுக்கு பிறகு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சிறைகளில் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ என்பதால் முதல் வகுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.
புழல் சிறை- செந்தில் பாலாஜிக்கு சலுகைகள்
அதே நேரத்தில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை இருப்பதாக செந்தில் பாலாஜிதரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து புழல் சிறையில் வளாகத்தில் உள்ள ஆஸ்பத்திரியில் வைத்து அவரை டாக்டர்கள் குழு கண்காணித்து வருகின்றனர். செந்தில் பாலாஜியின் உடல்நலம் சற்று தேறிய பின்னர் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள விசாரணை கைதிகளுக்கான முதல் வகுப்பு அறைக்கு மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிறப்பு உயர் பிரிவு மருத்துவமனையில் படுக்கை, மின் விசிறி, ஆக்சிஜன் வசதிகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுபோல, அவருக்கு சிறப்பு அறை ஒதுக்கப்பட்டால் கட்டில், மேசை, டிவி, பாத்திரங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்
பொன்முடி வீட்டில் நடந்த ED சோதனை.! கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் மதிப்பு இவ்வளவா.? வெளியான தகவல்